Ad

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

``பொய் சொல்கிறாரா பாரதிராஜா... புது சங்கம் ஆரம்பிக்கப்பட்டது எப்போது?!'' - உச்சம் தொடும் மோதல்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பல பிரச்னைகள் இருக்கின்றன. அரசு தரப்பில் ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்து அந்த சங்கத்தின் தேர்தலை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது நீதிமன்றம். ஆனால், தற்போது கொரோனா காரணமாக சினிமாத்துறையே ஸ்தம்பித்து நிற்கிறது. தியேட்டர்கள் எப்போது திறக்கும், படப்பிடிப்புகள் நடத்த எப்போது அனுமதி கிடைக்கும் என பல கேள்விகள் இருக்கின்றன. இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என ஒரு புதிய சங்கம் உருவாகவிருக்கிறது என்றும் அதில், எஸ்.ஏ.சந்திரசேகர், சத்யஜோதி தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு, சுரேஷ் காமாட்சி, சிவா, லலித்குமார் ஆகியோர் முக்கிய பொறுப்பேற்கப்போவதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், இயக்குநர் பாரதிராஜா முதலில் இதை மறுத்து அறிக்கை வெளியிட்டார். ஆகஸ்ட் 1-ம் தேதி அவர் வெளியிட்ட அறிக்கையில், ``நமது சங்கம் பல்வேறு நபர்களால், பல்வேறு காரணங்களால் செயலற்றத் தன்மையில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். திரைப்படங்கள் எந்த விதப் பிரச்னையுமின்றி தியேட்டரில் வெளிவர, தயாரிப்பாளர் நலன் காக்க சங்கம் சரியான பாதையில் பயணிக்க சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்பது பலரது கோரிக்கை. அதற்கு சுய நலமற்ற நிர்வாகிகளை நாம் இனம் கண்டு தேர்ந்தெடுக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம் . அதற்கு நமது சங்கத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்தப் பிறகே சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. சமீபகாலமாக பல்வேறு ஊடகங்களில் எனது தலைமையில் வந்த புதிய அமைப்பு பற்றியும் நிர்வாகிப் பட்டியல் பற்றியும் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அனைத்து நடப்பு தயாரிப்பாளர்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனை கேட்ட பிறகு முடிவு எடுக்கப்படவுள்ளது" என்று அதில் தெரிவித்திருந்தார் இயக்குநர் பாரதிராஜா.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்

ஆனால், அடுத்த இரண்டு நாட்களில் (03-08-2020) பாரதிராஜாவிடம் அறிக்கை வந்தது. ``என் இனிய தயாரிப்பாளர்களே... கொஞ்சம் வலியோடுதான் தொடங்குகிறேன். பிரசவம் வலி மிக்கதுதான். ஆனால், பிறப்பு அவசியமாச்சே. அப்படித்தான் இந்த முயற்சியும். புதிய சங்கத்தின் பிறப்பும் அவசியமாகிறது. தாய் என்பவர் இன்னொரு உயிரை இவ்வுலகிற்குப் பரிசளிப்பவள். தனக்குள்ளேயே எல்லாவற்றையும் வைத்துக் கொண்டிருப்பவள் அல்ல. தாய்க்கு ஒரு பிரசவம் எப்படி வலிக்குமோ அதே வலி பிள்ளைக்கும் இருக்கும். தாயிலிருந்து இன்னொன்றாய் பிரியும் குழந்தைக்கு உள்ள பெருவலியை இக்கு யாரும் பேசுவதில்லை. அதன் வலியை அப்பிள்ளை வெளிப்படுத்தாததால், அவ்வலியை நாம் உணராமலே போய்விடுகிறோம். ஆனாலும் நான் வெளிப்படுத்தத் தெரிந்த குழந்தை. இன்னொரு சங்கம் என்ற குழந்தை முயற்சி எனக்கு வலிக்கவே செய்கிறது. வலிக்க வலிக்கவே பிறக்க வேண்டியதும் அவசியமாகிறது.

கடந்த எனது அறிக்கையில் சக தயாரிப்பாளர்களிடம் கலந்து பேசித்தான் இன்னொரு சங்கம் பற்றி முடிவெடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன். அடிப்படைப் பேச்சு வார்த்தைகளின்போதே செய்திகள் காற்றில் கசியத் தொடங்கி சில கருத்து வேறுபாடுகள் பரவத் தொடங்கிவிடுகின்றன. இப்போதைய காலக்கட்டத்தில் இன்னொரு சங்கம் அவசியமாகிறது. ஒரு மடை அடைத்துக் கொண்டால் இன்னொரு மடையைத் திறப்பது போல்தான் இதுவும். நாம் செயல்பட்டே ஆண்டுகளாகிவிட்டன. பட வெளியீடுகள், பணம் போட்டவர்களின் அபாய நிலை, எதிர்காலக் கேள்விக்குறி எல்லாவற்றுக்கும் பதில் தேடுவது முக்கியம். தாய் சங்கத்தை உடைக்கவில்லை. அவள் அப்படியே மெருகுற இருப்பாள். திரை வீட்டின் ஆளுமை அவள்தான். அவளைவிட்டு யாரும் எங்கும் போகவில்லை. பிரித்தெடுக்கவும் இல்லை. இது செயல்பட வேண்டிய காலகட்டம்.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்

Also Read: ``விஜய் வீட்டில் பாரதிராஜாவுக்கு ஏன் விருந்து?!'' - தொடரும் தயாரிப்பாளர் சங்கப் பஞ்சாயத்துகள்

கையை பிசைந்துகொண்டே இன்னும் எவ்வளவு நாள்கள் காத்திருப்பது? அதனால், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிர்வாகிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தறிந்து மற்ற நிர்வாகிகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். எனது தலைமையில் உறுப்பினர் சேர்க்கை இன்றிலிருந்து தொடங்குகிறோம். இதைப் பிரித்தாள்கிறோம் என்று யாரும் நினைக்க வேண்டாம். சில முக்கிய முடிவுகளுக்காக உழைக்க இருக்கிறோம். இப்பிறப்பில் செயல்பாடுகள் சினிமாவின் ஆரோக்கியம் கருதியே தொடங்குகிறது. பிள்ளைகள், தோழர்கள், இணை வயதினர்கள், மூத்தோர் என அனைவரும் இந்த அவசியத்தை, இக்கட்டான சூழல் கருதி புரிந்துகொள்ள வேண்டுகிறேன்" என்ற அறிக்கையை வெளியிட்டார் பாரதிராஜா.

தலைவர் - பாரதிராஜா, துணைத் தலைவர்கள் - எஸ்.ஆர்.பிரபு, லலித் குமார், பொருளாளர் - சத்யஜோதி தியாகராஜன், செயலாளர்கள் - சிவா, சுரேஷ் காமாட்சி ஆகியோர் புதிய சங்கத்தில் பொறுப்புகள் வகிப்பதாக கூறப்பட்டது. இந்தச் சங்கத்தில் உறுப்பினராக சேர வேண்டும் என்றால் கடந்த ஐந்து வருடங்களில் மூன்று படங்கள் தயாரித்திருக்க வேண்டும் எனும் விதிமுறை பிரதானமாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, நேற்று (06.08.2020) செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர்கள் கே.ராஜன், கலைப்புலி எஸ்.தாணு, தேனாண்டாள் முரளி ஆகியோர் ``50 பேர் இருப்பது ஒரு சங்கமா? தயாரிப்பாளர் சங்கத்தில் 1,300 பேருக்கு மேல் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் 1,300 பேரை வைத்து போராடினால் அரசாங்கம் கூட நம் கோரிக்கை ஏற்றுக்கொள்ளும். இந்த காலக்கட்டத்தில் சங்கத்தை இரண்டாக உடைத்துவிட்டு செல்வது மூத்த பிள்ளையான நீங்கள் செய்யும் காரியமா? உங்களை யாரும் எதிர்க்கவில்லையே? எல்லோரும் உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டுதானே இருந்தோம். இப்படி அநாதையாக விட்டுவிட்டு போகிறீர்களே! நீங்கள் வாருங்கள்... வழிகாட்டுங்கள்... உங்களுக்கு என்ன குறை வந்தது?

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் பதிவு செய்யப்பட்ட ஆவணம்
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் பதிவு செய்யப்பட்ட ஆவணம்

தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோரை வைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். ஆகவே, பாரதிராஜா அவர்களை பணிவோடு கேட்டுக்கொள்கிறோம். என்ன கோரிக்கையாக இருந்தாலும் எல்லோரும் இணைந்து போராடுவோம். அரசாங்கம் நமக்கு செவி சாய்க்கிறது. சிலர் பாரதிராஜாவை கெடுக்கிறார்கள். குறிப்பிட்ட சிலர் அவர்களுடைய பிரச்னையை தீர்ப்பதற்கு அவரை சூழ்நிலைக் கைதியாக்கி இருக்கிறார்கள். தனிப்பட்டமுறையில அவர் கஷ்டமான மனநிலையில இருக்கிறார் என்று தெரியும். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீண்ட நெடிய வரலாறு படைத்தது. அது தொடர்ந்து செயல்பட வேண்டும். அதில் அனைவரும் இருக்க வேண்டும். நாங்கள் யாரையும் ஒதுக்கவில்லை. தனியாக சங்கம் ஆரம்பிப்பதால் எந்த பிரச்னையையும் தீர்க முடியாது. உங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்" என்று கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா தலைமையில் உருவாகியிருக்கும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஜூலை 24-ம் தேதியே பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற ஆவணம் வெளியாகி இருக்கிறது. அதில் பொறுப்புகளில் இருக்கும் அனைவரும் கையொப்பமிட்டு இருக்கின்றனர். ஆனால், ஆகஸ்ட் 1-ம் தேதி புதிய தயாரிப்பாளர் சங்கம் பற்றி ஊடகங்களில் வரும் செய்தி உண்மையல்ல என்று பாரதிராஜா அறிக்கை வெளியிட்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

``இயக்குநர் பாரதிராஜா பொய் அறிக்கை விட்டிருக்கிறார். அவரைப் பொய் சொல்லவைக்கிறார்கள். முன்னுக்குப் பின் முரணாகப் பேசவைக்கிறார்கள்'' என்கிறார்கள் எதிர்தரப்பில் இருக்கும் சில தயாரிப்பாளர்கள். இதற்கு பாரதிராஜா தரப்பில் இருந்து என்ன பதில் வரவிருக்கிறது என்பதுதான் அனைத்து தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.



source https://cinema.vikatan.com/tamil-cinema/controversy-over-bharathirajas-tamil-film-active-producers-association

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக