Ad

சனி, 22 ஆகஸ்ட், 2020

கரூர்: `இரண்டாவது மகனையும் அரசுப் பள்ளியில் சேர்த்திருக்கிறோம்!'- அசத்தும் ஆசிரியர் தம்பதி

"மத்தவங்களை, தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கச்சொல்லி வலியுறுத்துகிறோம். அப்போ, நாமளே முன்னுதாரணமா இருக்கணும் இல்லையா?. அதற்காக, எங்களோட முதல் பையனை அரசுப் பள்ளியில் சேர்த்தோம். இப்போ, எங்களோட இரண்டாவது பையனையும் அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்த்துள்ளோம்" என்று கூறி, எல்லோருக்கும் வியப்பை ஏற்படுத்துன்றனர், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தம்பதியான பூபதி அன்பழகனும், பிருந்தாவும்.

அரசுப் பள்ளி

Also Read: கரூர்: `கலங்காதே, நான் பார்த்துக்கிறேன்!' - இறந்த ஆசிரியரின் குடும்பத்தை நெகிழ வைத்த ஆட்சியர்

`கல்வி போதிப்பதிலும், ஒழுக்கத்தைக் கற்பிப்பதிலும் தனியார் பள்ளிகளே சிறந்தவை. அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்தால், அவர்களின் எதிர்காலம் வீணாகிவிடும்' என்று தவறான புரிதலில், பெற்றோர்கள் பலர் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க, கால்கடுக்க காத்திருக்கிறார்கள். அதற்காக, சக்திக்கு மீறி கடன் வாங்கி செலவழித்து, கடைசியில் கடனாளியாகி நிற்கிறார்கள்.

Also Read: `தனியார் ஆங்கிலப் பள்ளி டு அரசுப் பள்ளி!’ - அட்மிஷனில் கலக்கும் ஈரோடு மாநகராட்சிப் பள்ளி

இந்தச் சூழலில், `எங்கள் இரண்டு பிள்ளைகளையும் அரசுப் பள்ளிகளில்தான் சேர்த்துள்ளோம்' என்று கர்வத்தோடு சொல்கிறார்கள், ஆசிரியப் பணியில் இருக்கும் தம்பதியினர். கரூர் மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்தவர்கள்தான், இந்த தம்பதியினர். பூபதி அன்பழகன், இதே ஒன்றியத்தில் உள்ள பொய்யாமணியில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிவருகிறார்.

பூபதி அன்பழகன், பிருந்தா தம்பதி மகன்களுடன்...

அதேபோல், அவரது மனைவி பிருந்தா, குளித்தலை ஒன்றியத்தில் உள்ள மேலக்குட்டப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு, தனுபன், திலீபன் என்ற இரண்டு மகன்கள். இதில், தனுபனை அருகில் உள்ள சிவாயத்தில் செயல்பட்டுவரும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்க வைத்திருக்கிறார்கள்.

இந்தநிலையில், பூபதி அன்பழகன் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிவரும் பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தங்களது இளைய மகன் திலீபனை ஒன்றாம் வகுப்பில் சேர்த்து, மற்றவர்களுக்கு முன்னுதாரண தம்பதியாக மாறியிருக்கிறது, இந்த ஆசிரியத் தம்பதி.

பொய்யாமணி அரசுப் பள்ளி

இதுகுறித்து, பூபதி அன்பழகனிடம் பேசினோம்.

``நாங்களும் அரசுப் பள்ளியில் படித்துதான், இந்த நிலைமைக்கு வந்திருக்கிறோம். எங்களுக்குப் போதுமான வசதி, வாய்ப்புகளை இந்த ஆசிரியர் வேலைதான் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. தேவையான பொருளாதாரத்தைக் கொடுத்திருக்கிறது. நாங்கள் அரசுப் பள்ளியில் படித்ததால், கெட்டுப்போகவில்லை.

Also Read: சிவகங்கை: `213 டு 1,320; அதிகரித்த மாணவர் சேர்க்கை!’ - அரசுப் பள்ளி அட்மிஷனுக்கு போட்டி

இந்த சமூகத்தில் உயர்ந்த நிலைக்கே வந்திருக்கிறோம். ஆனால், இதுபுரியாமல்தான் பல பெற்றோர்கள் சக்திக்கு மீறி கடன்வாங்கி, 'நல்ல கல்வி கிடைக்கிறது' என்று அவர்களாகவே நினைத்துக்கொண்டு, தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறாங்க. ஆனால், 'அரசுப் பள்ளிகளில் படித்தால் சாதிக்கலாம்' என்பதை மக்களுக்கு உணர்த்தவே, நாங்கள் எங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்திருக்கிறோம்.

பூபதி அன்பழகன்

நாங்க அரசுப் பள்ளியில் வேலை பார்ப்பதால், பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்கச் சொல்லி பெற்றோர்களை கேன்வாஸ் செய்வோம். அப்போது அவர்கள், `நீங்கள் உங்கள் பிள்ளைகளை எங்கே படிக்க வைக்கிறீர்கள்?' என்று கேட்டுவிடக்கூடாது இல்லையா? அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உண்மையில் அர்ப்பணிப்போடு மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கிறாங்க. அவர்களிடம் பாடம் படிக்கும் பிள்ளைகள் உயர்ந்த நிலைக்கு வருவாங்களேயொழிய, கீழ்நிலைக்கு போய்விடமாட்டாங்க. இதை ஒவ்வொரு பெற்றோரும் உணரனும். அதற்காகவே, நாங்கள் எங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் படிக்கவைக்கிறோம்" என்றார் மகிழ்ச்சியாக!



source https://www.vikatan.com/news/education/we-enrolled-our-second-son-also-in-government-school-says-karur-teacher-couple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக