பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
திருமணம் முடிந்து இருபத்தைந்து வருடங்கள் முடிந்ததை ஒரு சிறு விழாவாகக் கொண்டாடினர் ராமன் தம்பதிகள். ராமன் ஒரு அலுவலகத்தில் பெரிய அதிகாரியாக வேலை பார்த்து வந்தான்.
விழா முடிந்து வந்த பரிசுப் பொருள்களையும், பணமாகக் கொடுத்தவர்களின் விவரங்களையும் ராமன் தன் மனைவி மற்றும் மகனுடன் அலசிக் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட ஒரு ஐம்பதாயிரத்திற்கு மேல் பணமாகவே அன்பளிப்பாக வந்திருந்தது. சிலர் வெள்ளி விளக்கு, கடிகாரம், பாத்திரம் என்று பொருள்களாகவும் கொடுத்துள்ளனர். அவைகளைக் கண்டு அவர்களுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது.
ராமன், பணமாக யார் யார் கொடுத்தார்கள் என்று அவர்களின் பெயர்களைப் படித்து பார்த்தான். தன் மைத்துனன் மாறன் 500 ரூபாய் கொடுத்துள்ளார். அது போல கண்ணன், ஜேம்ஸ், சின்னதுரை மற்றும் நண்பர்களில் சிலரும் கூட இவ்வளவு பெரிய தொகையை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார்கள். அவர்களின் பெயர்களைப் படிக்கும் போது அவர்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் புகழ்ந்து பாடினான்.
சில நண்பர்களும், சில உறவினர்களும் 100, 200 ரூபாயென்று சற்று குறைவாகவும் கொடுத்திருந்தனர். அவர்கள் பெயர்களைப் படிக்கும் போது அவர்களைப் பற்றி புகழ் வார்த்தைகள் சற்று குறைவாகவே வந்தன.
பிறகு பொருள்களாக வந்தவற்றை ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்து தன் மனத்தில் உள்ள எண்ணங்களை சொல்லிக் கொண்ட்டிருந்தான். அன்பளிப்பாக வந்த பொருட்களில் கர்ணன் என்ற ஒரு நண்பர் ‘வாழுங்கள் நூறு வரை’ என்ற புத்தகமொன்றைப் பரிசளித்திருந்தார். அதன் மேல் அட்டையைப் பார்த்துவிட்டு, ‘ஆமாம், இவனுக்கு வேறு ஒன்றும் பரிசாகக் கொடுக்க வக்கில்லை. எப்போதோ வந்த குப்பை புத்தகத்தை யார் கேட்டார்கள்? இவன் பேரு வேற கர்ணன்!’ என்று அதைக் கொடுத்த நண்பனை இகழ்ந்து சாடினான். அந்த புத்தகத்தை மேலும் புரட்டிப் பார்க்க விருப்பமில்லாமல் அப்படியே ஓரம் கட்டி வைத்துவிட்டான்.
இரண்டு நாட்கள் கழித்து, ராமனின் நண்பர் ராவணன் தனக்கு அறுவது வயது ஆகியதற்காக ஒரு விழாக் கொண்டாடினார். ராமனுக்கும் அழைப்பிதழ் வந்திருந்தது. அதுதான் தக்க சமயமென்று, ராமன் அந்த ‘குப்பை புத்தகத்தை’ ஒரு நல்ல கலர் காகிதத்தில் சுற்றி தன் பெயரை எழுதி எடுத்துச் சென்று பரிசாகக் கொடுத்து ‘ராவணா, இந்த புத்தகம் உனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். இதை உனக்காகவே வாங்கி வந்தேன்’ என்று ஒரு புளுகை வேறு கூறி புன்னகைத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.
மறு நாள், சனிக்கிழமை. அலுவலகம் விடுமுறை. ராமன் அன்றைய நாளிதழை படிக்கும் வண்ணம் அமர்ந்திருந்தான். அப்போது, அவன் நண்பன் ராவணன், தன் கையில் ராமன் கொடுத்த ‘வாழுங்கள் நூறு வயது’ புத்தகத்துடன் அங்கே வந்தான். ‘ராமா, நீ கொடுத்த புத்தகம் மிக அருமையாக இருக்கிறது. அப்புத்தகத்தினுள், ஒரு சிறு குறிப்பும் ஒரு 500 ரூபாய் நோட்டும் இருந்தன. அக்குறிப்பு உனக்கு கர்ணன் என்ற நண்பர் எழுதியுள்ளார் போலுள்ளது. அக்குறிப்பையும் அதனுடன் இருந்த பணத்தையும் கொடுத்து விட்டுப் போகலாமென்று வந்தேன். இந்தா, பெற்றுக் கொள். திரும்பவும் நன்றி இந்த அருமையான புத்தகத்திற்கு, இல்லையில்லை, இந்த பொக்கிஷத்திற்கு!’ என்று கூறிவிட்டு ராமனின் பதிலுக்குக் காத்திராமல் உடனே சென்றான் ராவணன்.
இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ராமனின் மனைவி மற்றும் அவன் பிள்ளை அவனை ஏதோ ஒரு பார்க்கக் கூடாத ஒரு உயிர் பொருளைப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு அங்கிருந்து சற்றென்று உள்ளே விரைந்தனர்.
ராமன் தலை குனிந்து அமர்ந்தான்.
-டாக்டர் எஸ். சந்தானம் பிஎச்டி (சுற்றுச்சூழல்)
பொது மேலாளர் (ஓய்வு), நபார்ட்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/micro-story-about-precious-gift
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக