கொரோனா பேரிடர்:
கடந்தாண்டு தொடங்கி தற்போதுவரை இந்த கொரோனா பேரிடர் நாடு முழுவதும் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. வைரஸ் பரவலின் காரணமாகக் கோடிக்கணக்கான பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை, பொருளாதாரம் என்று பல்வேறு வகையில் கடுமையான பாதிப்பிற்கு அளாகியுள்ளனர். முதல் அலையின் தாக்கத்தை விட இரண்டாம் அலையின் தாக்கம் அதிகளவில் உள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைப் போலவே தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
முதல் அலையின் போதும் கடுமையான ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருந்தது. ரோந்து பணி, வாகன சோதனை, இ-பாஸ் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருந்து வந்தது. இந்த கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக மருத்துவம், திருமணம், இறப்பு போன்ற முக்கியமான விஷயங்களுக்குக்கூட செல்ல முடியாது பொதுமக்கள் சிரமப்பட்டனர். இ-பாஸ் கிடைக்காது உறவினர்கள் வருகையின்றி மாவட்ட மாநில எல்லைகளில் எத்தனையோ திருமணங்கள் நடைபெற்றன. பல திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டன.
வழங்கப்பட்ட தளர்வுகள்:
கடுமையான கட்டுப்பாடுகள் அனைத்துமே மக்களைக் கஷ்டப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டது இல்லை. அவை அனைத்துமே நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டது தான். வைரஸ் பரவலின் தாக்கம் குறைய ஒவ்வொரு கட்டுப்பாடுகளுக்கும் தளர்வுகள் வழங்கப்பட்டது. ஒரு கட்டத்தில் நோயின் தாக்கம் குறைய நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர்த்து பல்வேறு பகுதிகளுக்கும் தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தது.
மார்ச் 01-ம் தேதி தமிழகத்தில் பதிவாகும் புதிய தொற்றின் எண்ணிக்கை 474 ஆகவே இருந்தது. இதே எண்ணிக்கை ஏப்ரல் 10-ம் தேதி 5,989 ஆக உயர்ந்திருந்தது.
தளர்வுகள் வழங்கப்பட்டதே தவிர தமிழகத்தில் கொரோனா பரவல் இருந்துகொண்டேதான் இருந்தது. கொரோனா வைரஸ் பரவலை மறந்து நம்மில் பலரும் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளிகளை மறந்து ஊருக்குள் நடமாட ஆரம்பித்தோம். இது போன்ற செயல்களின் விளைவு தான் ஒரு பெரும் விபரீதத்தை ஏற்படுத்தியது.
அதிகரித்த கொரோனா தொற்று:
முதல் அலையில் தமிழகத்தில் பதிவான அதிகபட்ச ஒருநாள் புதிய தொற்றின் எண்ணிக்கையே 7,000-தை ஒட்டித்தான் இருந்தது. இரண்டாம் அலையில் சென்னையில் மட்டுமே 8,000-தை நெருக்கி புதிய தொற்றுகள் பதிவாகியிருந்தால் இரண்டாம் அலையின் தாக்கம் எந்த அளவிலிருந்திருக்கும் என்று பாருங்கள்.
இரண்டாம் அலையில் தமிழகத்தில் மே 21-ம் தேதி 36,184 புதிய தொற்றுகள் பதிவாகியது. தற்போதைய நிலையில் இந்தியாவிலேயே தினசரி அதிக தொற்று பதிவாகும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சென்னையைத் தொடர்ந்து தற்போது கோவை, சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படுகிறது.
பொதுமக்களின் பங்களிப்பு என்ன.?
தொற்று அதிகரித்துக் காணப்படுவதற்கு மக்களாகிய நாமும் நமது செயலும் முக்கிய காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணியாதது, தனி மனித இடைவெளியைப் பின்பற்றாது இருந்தது என்று ஒரு சிலர் செய்த தவறின் விளைவே தமிழகத்தில் இவ்வளவு பெரிய பாதிப்பைச் சந்தித்ததற்குக் காரணம்.
முதல் அலை சரியான பின்னர் கொரோனா தடுப்பூசி வந்த பின்னரும் பெரும்பாலானோர் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளவில்லை. தடுப்பூசி எடுத்துக்கொண்ட பெரும்பாலானோர் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருந்தனர். அப்படியே அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டிருந்தாலும் மிகவும் குறைந்த வீரியம் கொண்டதாகவே இருந்தது. இரண்டாம் அலை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி வரும் வேளையிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக முகக்கவசம் கூட அணியாது எந்த நடைமுறைகளையும் பின்பற்றாது கடைகளிலும், பொது இடங்களிலும் இருப்பதைக் காண முடிகிறது.
நீதிமன்றம் அறிவுறுத்தல் :
கொரோனா காலத்தில் தெருவில் உள்ள விலங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவது குறித்து சிவா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் போது நீதிபதிகள், `ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டது போன்ற மக்கள் நடந்துகொள்கின்றனர். இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை' என்று தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம் கூறினார்கள்.
இதற்கு, `முதல் அலையின் போது பல இடங்களில் காவல் துறையினர் கடுமையாக நடந்து கொண்டதால் பல இடங்களில் பிரச்னை ஏற்பட்டது. தற்போது, கடுமை காட்ட வேண்டாம் என்று காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை, பொதுமக்கள் சாதகமாக எடுத்துக்கொண்டது வெளியில் வருவதற்குக் காரணமாக இருக்கலாம்' என்று வழக்கறிஞர் கூறினார்.
பொதுமக்கள் முகக்கவசம் அணியாது, விதிமுறைகளைப் பின்பற்றாது காவல்துறையினரையும், அரசாங்கத்தையும் ஏமாற்றலாம். ஆனால், கொரோனா வைரசை ஏமாற்ற முடியாது. நம் பாதுகாப்பை நாம் மட்டுமே உறுதி செய்ய முடியும். தேவையான காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். அப்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். எந்த இடமாக இருந்தாலும் அங்கு தனிமனித இடைவெளியைப் பின்பற்றியே ஆக வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிக அவசியமான ஒன்று. இந்த கொரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு தனி மனிதனின் பங்களிப்பும் மிக முக்கியமானது. அப்போது தான் நாம் முழுமையாக இந்த போரில் வெற்றி பெற முடியும்.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/as-a-public-what-is-our-duty-during-this-corona-pandemic-curfew
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக