Ad

செவ்வாய், 22 ஜூன், 2021

கச்சத்தீவு மீட்பு - தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது மட்டும் போதுமா?

தி.மு.க அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளும் அரசு எழுதிக் கொடுக்கும் அவர்களின் செயல்களைப் புகழும் உரையாக மட்டுமே எப்போதும் இருக்கும் ஆளுநர் உரை மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது கூடுதல் கவனம் கிடைத்துள்ளது. தந்தை பெரியார் காண விரும்பிய சுயமரியாதை சமூகமாகவும், உரிமை பெற்ற மக்களாகவும், எல்லா வளமும் கொண்ட மாநிலமாகவும், தமிழ்நாட்டை மாற்ற இந்த அரசு உறுதியேற்றுள்ளது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற அண்ணாவின் பொன்மொழிக்கு ஏற்ப தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது; சமூக நீதி, சமத்துவத்தை அடித்தளமாகக் கொண்ட அரசாக இந்த அரசு செயல்படும் எனத் தொடங்கிய ஆளுநர் உரையில் முதலமைச்சருக்கான ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டப்லோடு உள்ளிட்டோர் அடங்கிய பொருளாதார ஆலோசனை குழு அமைப்பது தொடங்கி, தமிழ்வழியில் பயின்றவர்களுக்குத் தமிழ்நாடு அரசுப் பணிகளில் முன்னுரிமை, ஒன்றிய அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை, சென்னை மாநகரத்தின் கட்டமைப்பை சர்வதேச ரத்துக்கு உயர்த்த சிங்காரச் சென்னை 2.0 எனும் புதிய திட்டம், பெண்களின் பங்களிப்பை அதிக அளவில் ஊக்குவிக்கும் பொருட்டு பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் மாவட்டம் தோறும் நிறுவப்படும், நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்காமல் இருக்கத் தேவையான சட்டங்கள் நிறைவேற்றி ஒப்புதல் பெறப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் அடங்கியதாக இருந்தது.

ஆளுநர் உரை

மேலும், ஈழத் தமிழர்களுக்குச் சம உரிமை, ஈழத்தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்தப்படுவதோடு கச்சத்தீவை மீட்கவும் வலியுறுத்தப்படும் எனவும் ஆளுநர் உரையில் பேசப்பட்டுள்ள போதும் தமிழக மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கச்சத்தீவை மீட்பது குறித்தும், சிஏஏ குறித்தும் தெளிவான விளக்கங்கள் உரையில் இடம்பெறாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தொடர்ந்து கச்சத்தீவை மீட்பது குறித்து ஏன் எந்த அரசும் தெளிவான கொள்கை முடிவை எடுக்கத் தயங்குகின்றன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Also Read: 'ஒன்றிய அரசு முதல் பெரியார் வரை...' ஆளுநர் உரையில் பாஜக-வை சீண்டியதா ஸ்டாலின் அரசு?

கச்சத்தீவு பிரச்னை குறித்து தமிழ்த்தேசியவாதி பழ.நெடுமாறனிடம் பேசினோம் “கச்சத்தீவு நமக்குச் சொந்தமானது. ராமநாதபுரம் ஜமீன்தாருக்குச் சொந்தமானது என்பதற்காக ஆவணங்கள், பட்டாக்கள் எல்லாம் இருக்கின்றன. ராமநாதபுரம் ஜமீன்தார் மற்றும் தமிழ்நாடு அரசிடமும் கேட்காமல் கச்சத்தீவை இலங்கை அரசிடம் கொடுப்பதற்கு மத்திய அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. அப்படிச் செய்வது சட்டப்படியும் தவறானது. பிரதமர் இந்திரா காந்தி மற்றும் இலங்கை அதிபர் பண்டார நாயகா ஆகியோருக்கிடையே ஏற்பட்ட இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சத்தீவை அப்போதைய மத்திய அரசு இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது. ஆனால், எந்த வெளிநாட்டோடு உடன்பாடு செய்தாலும் அந்த உடன்பாட்டை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தம் இதுவரை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்குக் கொண்டு செல்லப்படவும் இல்லை, ஒப்புதல் பெறவும் இல்லை. அன்றைக்கே நாடாளுமன்றத்தைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் அதை எதிர்த்துப் பேசியிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசாங்கத்திற்குத் தெரிவிக்காமல் கச்சத்தீவை இலங்கைக்கு எப்படிக் கொடுக்கலாம் எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இன்றைக்கு வரைக்கும் இந்திய அரசிடமிருந்து அதற்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

பழ.நெடுமாறன்

கச்சத்தீவைக் கொடுத்ததால் இன்றைக்கும் நம்முடைய மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்ததோடு சிங்கள கடற்படையால் சுட்டுக் கொல்லும் அவலநிலைக்கும் ஆட்பட்டிருக்கிறார்கள். கச்சத்தீவைக் கொடுத்ததே தவறு எனும் போது அவற்றைச் சுட்டிக்காட்டி அதை மீட்பதற்கு உரிய நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு செய்யாமல் தற்போதும் வலியுறுத்திக் கொண்டிருப்பது ஏற்புடையதல்ல. நம்முடைய பொருள், நமக்கு உரிமையானது நம்மிடம் இருப்பதுதான் சரி” தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியதென்ன எனப் பதிவு செய்தார்.

தி.மு.க செய்தித்துறை இணைச் செயலாளர் ராஜீவ்காந்தியிடம் கச்சத்தீவு பிரச்னை தொடர்பாக ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த கருத்து குறித்துக் கேட்டோம் “அவசரநிலை காலகட்டத்தில் அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியிலிருந்த போது கச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு அளித்தது. அது தொடர்பாக நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் தற்போதும் நிலுவையில் இருக்கின்றன. எல்லைகள் தொடர்பான விவாதங்களின் அதோடு தொடர்புடைய மாநிலங்களின் அனுமதியின்றி முடிவுகளை எடுக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. அதை நமது அரசியலமைப்புச் சட்டமும் அனுமதிக்கிறது. அது முழுக்க முழுக்க ஒன்றிய அதிகாரத்திற்கு உட்பட்டது. எனவே அதில் நாம் தலையிட முடியாது. நாம் தமிழர் போன்ற கட்சியினர் ராணுவத்தை அனுப்பி கச்சத்தீவை மீட்போம் என்பதெல்லாம் தேவையில்லாத வீண் வாதங்கள். நாடாளுமன்றத்தில் இருக்கும் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே கச்சத்தீவை மீட்பதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

ராஜீவ் காந்தி, தி.மு.க

மாநில அரசால் வலியுறுத்தலாம், கருத்துருவாக்கத்தை உருவாக்க முடியும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். இந்த அத்தனை வழிகளிலும் தி.மு.க அரசு ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மாநில அரசின் உரிமைகள் சார்ந்து அரசியலமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்று தி.மு.க தொடர்ந்து பேசி வருகிறது. அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றாத வரை, நீதிமன்றம் உத்தரவிடாத வரை கச்சத்தீவை மீட்க வேண்டும் என வலியுறுத்த மட்டும்தான் முடியும்” என்றவர்...

Also Read: ’’500 ரூபாய் டீசல்தான்; ஆனால் ரூ.20,000 செலவு!’’ - மீனவர்களின் கச்சத்தீவு வேதனை

”கச்சத்தீவு போன்று ஒரு மாநிலத்திற்குச் சொந்தமான பகுதிகளை மாநிலத்தின் ஒப்புதல் இன்றி யாருக்கும் கொடுக்கக்கூடாது என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஒத்த கருத்துடைய கட்சிகளைக் கச்சத்தீவை மீட்பது குறித்துப் பேச வைப்பது, அது தொடர்பாகச் சட்டம் இயற்றச் செய்து அதை நிறைவேற்ற வைப்பதுதான் இதைத்தான் நாம் செய்ய முடியும். ஒன்றிய பட்டியல், மாநிலப் பட்டியல், ஒத்திசைவுப் பட்டியல் என மூன்று வகை இருக்கிறது. இதில் ஒன்றிய பட்டியலில் மாநில அரசு தலையிடவே முடியாது. வலியுறுத்தலாம், கருத்துருவாக்கத்தை உருவாக்கலாம். ஒருவேளை கச்சத்தீவு விவகாரம் ஒத்திசைவுப் பட்டியலிலிருந்திருந்தால் நீட் மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எடுத்தது போல நாங்கள் நீங்கள் இயற்றிய சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என நாம் எதிர்க்கலாம். அது குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றலாம். இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றால் யாருக்கு உரிமை இருக்கிறது என நீதிமன்றம் தீர்மானிக்கும். அப்படித்தான் இட ஒதுக்கீடு மற்றும் அலுவல் மொழியாக இந்தி மொழி கொண்டு வரும் முயற்சிகளுக்குத் தடை பெற்றோம்.

எம்.ஜி.ஆர் - இந்திரா காந்தி

கச்சத்தீவு விவகாரத்தில் இப்படி நாம் செயல்பட முடியாது. அதற்காகப் போராடுவோம் என்று சொல்லி வருகிறோம். மாநில சுயாட்சி மற்றும் அலுவல் மொழியாக மாநில மொழிகளையும் அறிவிக்க வேண்டும் என்பன போன்றவை நீண்ட கால இலக்கு. உடனே நடக்குமா என்றால் அதற்கு நிச்சயம் கொஞ்சம் காலம் எடுக்கும்தான். ஒன்றிய அரசில் தி.மு.க அங்கம் வகிக்கும் போது நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் கச்சத்தீவை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். அதை நோக்கித்தான் தி.மு.க பயணித்துக் கொண்டிருக்கிறது” எனக் கச்சத்தீவை மீட்பதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து விளக்கினார்.

எது எப்படியோ நமக்கு உரித்தான கச்சத்தீவு மீட்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல அவர்களின் உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் ஆசை.



source https://www.vikatan.com/government-and-politics/politics/is-it-enough-just-to-put-a-pressure-on-the-centrel-government-for-kasha-dheevu-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக