Ad

திங்கள், 7 ஜூன், 2021

"கொரோனா குறைந்த பிறகு எளிய முறையில் ப்ளஸ் 2 தேர்வு நடத்துவதே சரி"- கி.வெங்கட்ராமன்

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருப்பதால், இந்த ஆண்டு ப்ளஸ் 2 இறுதித் தேர்வு நடைபெறாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு எழுந்துள்ளது. அதேசயம் தற்போதுள்ள மிகவும் ஆபத்தான கொரோனா சூழலில், ப்ளஸ் 2 தேர்வை கைவிட்டிருப்பது சரியானது. ஆனால் இந்த ஆண்டு இவர்களுக்கு தேர்வே கிடையாது என சொல்வது , இவர்களது எதிர்காலத்திற்கு பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் சமூக ஆர்வலரும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளருமான கி. வெங்கட்ராமன். இதனால் மாணவர்கள் எந்தெந்த வகைகளில் பாதிக்கப்படுவார்கள் என்பதை பட்டியலிடும் இவர், இதற்கு வேறு ஒரு மாற்று யோசனையையும் முன் வைக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின்

கொரோனா தொற்று இரண்டாம் அலை கடுமையாக இருக்கும் சூழலில் ப்ளஸ் 2 தேர்வு உடனடியாக நடத்தமுடியாது என்ற முடிவு சரியே. ஆனால் இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து வினாக்களை எளிமையாகவும் குறைவான எண்ணிக்கையிலும் அமைத்து 1.30 மணி நேரத் தேர்வாக நடத்த முடிவெடுத்திருக்க வேண்டும். இறுதித் தேர்வு கைவிடப்பட்ட நிலையில் எவ்வாறு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய வல்லுநர் குழு அமைப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

கி.வெங்கட்ராமன்

இணைய வழி வகுப்புகளும், இணைய வழி இடைத் தேர்வுகளும் அரை குறையாகவும், குழப்பமாகவும் நடந்துள்ள சூழலில் அதை அடிப்படையாக வைத்து மாணவர்களின் இறுதி மதிப்பெண் முடிவு செய்யப்படுமானால் அது கிராமப்புற மாணவர்களையும், பிற்படுத்தபட்ட, தாழ்த்தப்பட்ட சமூத்தைச் சார்ந்த மாணவர்களையும் கடுமையாக பாதிக்கும். இன்னொருபுறம் மத்திய அரசு மருத்துவம் உள்ளிட்ட உயர் நிலை கல்விக்கு நீட் தேர்வு நடத்துவதில் பிடிவாதமாக இருக்கிறது. ஏற்கெனவே நீட் தேர்வுக்கு அமர்ந்தவர்களில் கணிசமானவர்கள் இரண்டு ஆண்டுகளும் அதற்கு மேலாகவும் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி எடுத்து கொண்ட பழைய மாணவர்களாகும். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடத்த வேண்டாம் என கேட்டுகொண்டிருப்பது, எந்த அளவிற்கு பயன்விளைக்கும் என்பது கேள்விக்குறியே இது போதாதென்று கல்லூரி கல்விக்கும், அனைத்திந்திய நுழைவு தேர்வுகள் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறன. இவ்வாறான நிலைமைகளையெல்லாம் கருத்தில் கொண்டால் இரண்டு மூன்று மாதங்கள் கழித்து ப்ளஸ் 2 தேர்வை எளிமையான முறையில் நடத்துவதே சரி என்ற முடிவுக்கு வர முடியும். எனவே தமிழ்நாடு அரசு தமது முடிவை மறு ஆய்வு செய்து மூன்று மாதங்கள் கழித்து ப்ளஸ் 2 இறுதித் தேர்வை உரிய பாதுகாப்புடன் நடத்த முன்வரவேண்டும்’’ என வலியுறுத்துகிறார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/tamilnadu-govt-should-conduct-2-exams-once-corona-spread-was-low-says-kivenkatraaman

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக