Ad

திங்கள், 7 ஜூன், 2021

திருப்பூர்: `அவசரமா, ரூ.15 ஆயிரம் வேணும்!’ - கலெக்டர் பெயரிலேயே ஃபேஸ்புக்கில் மோசடி முயற்சி

‘ஃபேஸ்புக்ல என்னோட பேர்ல போலியான ஆக்கவுண்ட் ஆரம்பிச்சி, என்னோட நண்பர்கள் சிலர்கிட்ட பணம் கேட்டு மெசேஜ் அனுப்பியிருக்காங்க. என் பேரைச் சொல்லி யாராவது பணம் கேட்டா தயவுசெஞ்சு கொடுத்து ஏமாந்துடாதீங்க!’... கடந்த சில நாட்களாகவே முகநூலில் பலரும் இப்படியான எச்சரிக்கைப் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். சாதாரண ஆட்களில் ஆரம்பித்து, வசதி படைத்தோர், தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள் என பலரின் பெயர்களில் இப்படியான மோசடி கடந்த சில நாட்களாகவே அரங்கேறி வருகிறது. இதன் உச்சமாக திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் பெயரிலேயே மோசடிக் கும்பல் ஒன்று போலியான முகநூல் பக்கம் ஒன்றை உருவாக்கி பணம் பறிக்க முயற்சித்திருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன்

அரசின் அறிவிப்புகளில் ஆரம்பித்து, கொரோனா விழிப்புணர்வு, தனிப்பட்ட செயல்பாடு என அனைத்தையும் உடனுக்குடன் தன்னுடைய ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு ஆக்டிவ்வாக இருப்பவர் திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன். பொதுமக்கள் ஏதேனும் புகார்களை ஃபேஸ்புக் அல்லது ட்விட்டரில் பதிவிட்டு அதில் கலெக்டர் விஜயகார்த்திகேயனை டேக் செய்தால், உடனே அதற்கு அவரிடமிருந்து பதில் கிடைக்கும். அந்தளவிற்கு பயங்கர ரெஸ்பான்ஸிவாக இருப்பார். இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மோசடிக் கும்பல் ஒன்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் பெயரில் போலியான ஃபேஸ்புக் பக்கம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறது. அதிலிருந்து அவருடைய முகநூல் நண்பர்கள் பலருக்கும் ‘ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட்’ அனுப்பியிருக்கின்றனர். கலெக்டரின் பெயர், படம் இருப்பதைப் பார்த்து ஏமாந்துபோய் பலரும் அதை கலெக்டருடைய அக்கவுண்ட் என நினைத்து அக்செப்ட் செய்துள்ளனர்.

போலி முகநூல் பக்கத்தில் நடந்த உரையாடல்

இப்படி போலியான ஃபேஸ்புக் வலையில் விழுந்த நபர் ஒருவரிடம் அந்த மோசடிக் கும்பல் தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்திருக்கிறது. ‘எப்படி இருக்கீங்க’ என வழக்கமான விசாரிப்புகளோடு ஆரம்பிக்க, அந்த நபரும் கலெக்டர் தான் ஃபேஸ்புக்கில் மெசேஜ் செய்கிறார் என நினைத்து ‘நான் நல்லா இருக்கேன் சார். நீங்களும் உங்க குடும்பத்துல இருக்கவங்களும் நல்லா இருப்பீங்கன்னு நம்புறேன்’ என பதில் கொடுத்திருக்கிறார். உடனே அந்த மோசடிக் கும்பல் ‘எனக்கு ஒரு சின்ன உதவி. அவசரமா ஒரு 15 ஆயிரம் ரூபாய் தேவைப்படுது. நான் ஒரு நம்பர் அனுப்புறேன், அதுக்கு அனுப்பி வையுங்க. நாளைக்கு காலையில நான் உங்களுக்கு கொடுத்துடுறேன்’ என மெசேஜ் செய்திருக்கிறது. உஷாரான அந்த நபர், ‘நான் கலெக்டர் அலுவலகத்துல தான் இருக்கேன் சார். நேரடியாகவே உங்களைப் பார்த்து பணத்தை கொடுத்துடுறேன். உங்க மேசேஜை போலீஸ்கிட்ட காட்டியும் அவங்க, உங்களை பார்க்க அனுமதிக்க மாட்டேங்குறாங்க’ என பதில் சொல்ல, ‘அவசரம். உடனே கூகுள் பே-ல பணத்தை அனுப்புங்க’ ரிப்ளை வந்திருக்கிறது. ‘தம்பி எங்க கலெக்டருக்கு நல்ல தமிழ் தெரியும்’ என உரையாடலை முடித்துக்கொண்டு, விவகாரத்தை ஸ்கிரீன்ஷாட் மூலமாக வெளியே கொண்டு வந்திருக்கிறார்.

போலி முகநூல் பக்கத்தில் நடந்த உரையாடல்

இந்த விவகாரம் குறித்து திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் பேசினோம். “இந்த விஷயம் என் கவனத்துக்கு வந்த உடனே, உடனடியாக நடவடிக்கை எடுக்கணும்னு போலீஸ்ல புகார் கொடுத்துட்டேன். அந்த ஸ்கிரீன்ஷாட் எல்லாம் எஸ்.பிக்கு அனுப்பியிருக்கேன். முதல்ல என்னோட ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை தான் ஹேக் பண்ணிட்டாங்களோன்னு நினைச்சு செக் பண்ணிப் பார்த்துட்டு, பாஸ்வேர்ட் எல்லாம் மாத்திட்டேன். ஃபேஸ்புக் நிறுவனத்திலும் இதுசம்பந்தாக புகார் கொடுத்துருக்கேன். அந்த மோசடிக் கும்பல் கொடுத்த கூகுள் பே நம்பரை டிராக் செஞ்சதுல கடந்த மே 13-ம் தேதி தான் அந்த சிம்கார்டை வாங்கியிருக்காங்க. சம்பந்தப்பட்ட நபர்கள் உத்திரப்பிரதேசத்துல இருக்கிறதையும் கண்டுபிடிச்சிருக்கோம். நிச்சயமாக சம்பந்தப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எந்தளவுக்கு நாம டிஜிட்டலை பயன்படுத்துறோமோ, அந்தளவுக்கு அதுல அபாயகரமான விஷயங்களும் இருக்கு. சோஷியல் மீடியா பயனாளியான நாமளும் கவனமாக இருக்கணும். இப்படி சோஷியல் மீடியாவுல வந்து பணம் கேட்டா யோசிக்கணும்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/collector-name-used-for-facebook-fraud-by-criminals

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக