Ad

புதன், 6 ஜனவரி, 2021

கரூர்: கல்லால் அடித்த கும்பல் ; `இது ஆணவக்கொலை?!' - கதறும் இளைஞரின் உறவினர்கள்

கரூர் நகரத்தில் உள்ள முக்கிய பகுதியான பசுபதீஸ்வரர் கோயிலுக்கு எதிரே, காவல் நிலையத்துக்கு 50 மீட்டர் தூரத்திலேயே இளைஞர் ஒருவர், 10 க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பலால், கல்லால் அடித்தும், கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பசுபதீஸ்வரர் ஆலயம்

Also Read: கரூர்: `சாதியால் கணவரைப் பிரிச்சுட்டாங்க!’ - கண்ணீர்விட்ட கர்ப்பிணி

கரூர் காமராஜர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் ஹரிஹரன்(வயது 23). இதே பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரின் கடை எதிரே உள்ள தெற்குதெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலன், தேவி தம்பதி. வேலன் தனது வீட்டருகே பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகள் உள்ளார், அவர், கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். சலூன் கடை நடத்தி வரும் ஹரிஹரனுக்கும், வேலனின் மகளுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக சொல்கிறார்கள்.

ஹரிஹரன்

அவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவர, கடந்த ஆறு மாத காலமாக ஹரிஹரனுக்கு அப்பெண்ணுக்கும் வீட்டில் எதிர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில், கரூர் பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு இளம்பெண்ணின் பெற்றோர், தன் மகளை கொண்டே ஹரிஹரனை, 'தனியாக பேசவேண்டும்' என அழைத்ததாக கூறப்படுகிறது.

அவ்விடத்துக்கு சென்ற ஹரிஹரனை வேலன் குடும்பத்தார் 10 க்கும் மேற்பட்டோர் சேர்ந்து கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். அங்கிருந்து கரூர் நகர காவல் நிலையம் 50 மீட்டர் தூரத்தில்தான் இருக்கிறது. இந்த நிலையில், போலீஸார் அவ்விடத்திற்கு விரைந்து வந்தும் கரூர் நகர போலீஸாரிடம், அடிபட்ட ஹரிஹரனை ஒப்படைக்காமல், தாங்களே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ப்பதாக அந்தக் கும்பல் இழுத்துச் சென்றதாகவும் சொல்கிறார்கள். இந்த நிலையில், கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஹரிஹரன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. காதலித்த இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த படுகொலை திட்டமிட்டு வேலன் குடும்பத்தாரால் செய்யப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.

கொலை நடைபெற்ற இடம்

இந்த நிலையில், சலூன் கடை நடத்தி வந்த ஹரிஹரனை வெட்டிக்கொன்றதாக, பெண்ணின் சித்தப்பா சங்கர் (50), தாய்மாமன்கள் கார்த்திகேயன்(40), வெள்ளைச்சாமி (38) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தந்தை வேலன், சித்தப்பா முத்து உள்ளிட்டவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கரூர் நகர காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ``இது ஆணவக்கொலை. ஆனால், இந்த வழக்கை, பையனின் கேரக்டர் சரியில்லை என்று சாதாரணமாக முடிக்க பார்க்கிறார்கள்" என்று ஹரிஹரனின் உறவினர்களும், நண்பர்களும் சொல்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/karur-young-boy-killed-a-gang-in-love-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக