இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார் ஸ்டண்ட் சில்வா. படத்தின் பெயர் 'சித்திரைச் செவ்வானம்'. இயக்குநர் விஜய் தயாரித்திருக்கும் இப்படத்தில் சமுத்திரகனி, ரீமா கலிங்கல், சாய்பல்லவியின் தங்கை பூஜா என பலரும் நடித்திருக்கிறார்கள். ஒரு சண்டை இயக்குநர் சண்டையே இல்லாமல் ஒரு படம் எடுத்திருக்கிறார்.
``உண்மைதாங்க. கவிதையான படத் தலைப்பை போலவே, படமும் எமோஷனலான கன்டன்ட். இந்தப் படம் உருவாகக் காரணமே ஏ.எல்.விஜய் சார்தான். என்னை இயக்குநராக்கி அழகு பார்த்திருக்கார். ஒரு அண்ணனா, ஒரு இயக்குநரா, ஒரு நண்பரா மிகப்பெரிய சப்போர்ட் செய்திருக்கார் கனியண்ணன்.'' ஆர்வத்துடன் பேசத் தொடங்கினார் சில்வா.
உங்களுக்குள் ஒரு இயக்குநர் இருந்ததை கண்டுபிடிச்சது யார்?
''படங்கள்ல நாம சண்டைக்காட்சிகள் அமைக்கறதை 'ஸ்டண்ட் இயக்கம்'னு தானே குறிப்பிடுறோம். ஏன்னா, பெரிய படங்கள்ல ஆக்ஷன் சீக்குவென்ஸ் பண்ணும்போது, அரை மணி நேரத்துக்கு மேலகூட ஸ்டண்ட்கள் அமைச்சு குடுத்திருக்கேன். பொதுவா, எல்லாமே வெறும் ஃபைட்ஸா இருக்காமல், அது கதையோடு சேர்ந்த சண்டையா இருக்கணும்னு நினைச்சு பண்ணுவேன். கதை மேல ஈர்ப்பாகி லாஜிக்கோடு காட்சிகள் அமைப்பேன். இந்த ஒர்க்கிங் ஸ்டைல் இயக்குநர் விஜய் சாருக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. அவர் ஒருநாள் ஒரு எமோஷனலான சின்னக் கதை ஒண்ணு சொன்னார். எனக்கும் அது ரொம்பப் பிடிச்சிடுச்சு. அப்பவே அவர் என்கிட்ட 'நீங்க டைரக்ட் பண்ணுங்க மாஸ்டர்'னு சொன்னார். நான் பொறக்கும் போதே, ஃபைட் மாஸ்டராகிடல. எல்லாமே பழக்கத்துல வர்ற விஷயம்தானே! அந்த மாதிரி, இந்தப் படம் பண்ணியிருக்கேன். 'மாஸ்டர்' பட விழாவின்போது விஜய்சேதுபதி சார் 'நீங்க டைரக்டர் ஆக வாழ்த்துகள்'னு சொல்லி வாழ்த்தினார்.
முழுக்கதையா எழுதி முடிச்சதும், இதுல வர்ற அப்பா கேரக்டருக்கு சமுத்திரக்கனியண்ணன் பொருத்தமானவரா தெரிஞ்சார். அவர்கிட்ட நான் ஒரு கதை பண்ணியிருக்கேன். நீங்க பண்றீங்களானு கேட்டேன். அவரும் கதையை கேட்டுட்டு ஆச்சரியமானார். ''ஃபைட் மாஸ்டர் சொல்ற கதைன்னதும் ஆக்ஷனெல்லாம் பெருசா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, சண்டையே இல்லாத அழகான மனச தொடுற கதையா இருக்கே! உங்ககிட்ட இத நான் எதிர்பார்க்கவே இல்லைனு'னு சொல்லி வியந்து வந்தார். அப்பா-பொண்ணுக்கு இடையேயான ஒரு எமோஷனல் கதை இது. பெண் குழந்தைகளை நாம எப்படி பார்த்துட்டிருக்கோம். இன்னும் எவ்ளோ பொறுப்பா பாத்துக்கணும்னு உணர்த்துற ஒரு கதையா இருக்கும்.
சாய்பல்லவியின் தங்கை இதுல எப்படி?
அப்பா கேரக்டருக்கு சமுத்திரக்கனி முடிவானதும். அவரது மகள் கேரக்டருக்கு யார்கிட்ட பேசலாம்னு நினைக்கறப்ப. ஏ.எல்.விஜய் சாரே 'சாய்பல்லவியின் தங்கை பூஜா. இந்த மகள் ரோலுக்கு சரியான தேர்வா இருக்கும்'ன்னார். கோவையில் இருந்த பூஜாகிட்ட கதையை சொன்னேன். ரொம்ப லைவ்வா இருந்தாங்க. கதையில் வாழ்ந்திருக்காங்க.
தொழில் நுட்ப கலைஞர்களும் உங்க நண்பர்கள்தானா?
ஆமாம் நண்பரே! சமுத்திரக்கனி, சாய்பல்லவின் தங்கை பூஜா, ரீமா கலிங்கல், சுப்ரமணியம் சிவா, பாண்டினு தெரிந்த முகங்கள் தவிர, புதுமுகங்களும் படத்துல உண்டு. தொழில்நுட்ப கலைஞர்களும் நல்ல குழுவா அமைஞ்சிருக்கு. மனோஜ் பரமஹம்சா சார் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். செகன்ட் யூனிட் கேமிராவை ஜி.வெங்கடேஷும் பண்ணியிருக்கார். சாம் சி.எஸ்.சின் பின்னனி இசையும், பிரவீனின் எடிட்டிங்கும் படத்தை உயீரோட்டமாக்கியிருக்கு. படத்துல சண்டைக்காட்சிகளே கிடையாது. நானும் ஏ.ல்.விஜய் சாரும் சேர்ந்து படத்தை தயாரிச்சிருக்கோம். கனியண்ணனும் பூஜாவும் அப்பா, பொண்ணாகவே ஆனதால பாசப்பிணைப்புகள் இயல்பாகிச்சு. நல்ல நடிகர்கள் கிடைக்கும் போது இயக்குநர்களோட வேலை சுலபமாகிடுது. கோவை, பொள்ளாச்சினு ஒரே கட்டமா போய், படப்பிடிப்பையும் முடிச்சிட்டோம்.
தியேட்டர்ல ரிலீஸ் பண்ணியிருக்கலாமே?
``இது என் முதல் படம். அதை தியேட்டருக்கான படமாகத்தான் இயக்கினேன். படத்தை முடிச்சிட்டு ரிலீஸ் வேலைகளை கவனிக்கும் போது, அப்ப தியேட்டர்கள்ல ஐம்பது சதவிகித இருக்கைகளுக்கு மட்டும் அனுமதியா இருந்துச்சு. அதனால, ஒடிடிக்கு முடிவாகிடுச்சு. அதனால திரையரங்குகள்ல ரிலீஸ் பண்ணமுடியாமப் போச்சு. ஸோ, ஒடிடினு முடிவாகிடுச்சு. அக்ரிமென்ட் போட்ட பிறகுதான் தியேட்டர்கள்ல நூறு சதவிகித இருக்கை அனுமதியாச்சு.
நான் இயக்குநர் ஆனதைக் கேள்விப்பட்டு விஜய் சாரும் சிம்பு சாரும் வாழ்த்தினாங்க. அதிலும் விஜய் சார், கொஞ்சம் ஷாக் ஆகி, 'என்னாதுனு' ஆச்சரியமாகி வாழ்த்தினார். நான் இயக்குநர் ஆனபிறகும் கூட யார்கிட்டேயும் பெருசா சொல்லிக்கல. அப்படியும் லிங்குசாமி சார், கௌதம்மேனன் சார், வெங்கட்பிரபுனு நிறைய இயக்குநர்கள் வாழ்த்தியிருக்காங்க. ஃபைட் மாஸ்டரா இப்ப 'மாநாடு' முடிச்சாச்சு. அடுத்து தெலுங்கில் சிரஞ்சீவி சார் படம், மலையாளம்னு ஃபைட் மாஸ்டரா கைவசம் நிறைய படங்கள் இருக்கு.'' என புன்னகைக்கிறார் சில்வா.
source https://cinema.vikatan.com/tamil-cinema/interview-with-stunt-silva-on-his-new-movie-as-a-director
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக