தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எம்.டி. தனி 83 தேவதானப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இந்தக் கூட்டுறவு கடன் சங்கத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 862 பேர் 5 பவுன் நகைகளை அடகு வைத்துள்ளனர்.
Also Read: 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி: ஒரே குடும்பத்தினரின் பல கடன்களும் தள்ளுபடியாகுமா?
சட்டப்பேரவைத் தேர்தலின்போது மு.க.ஸ்டாலின் ஐந்து பவுனுக்கு கீழே நகைகள் அடகு வைப்பவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் தற்போது தேவதானப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 5 பவுன் நகைக்கு கீழ் அடகு வைத்திருந்த 862 பேரில் 461 பேர் கடன் தள்ளுபடிக்கு தகுதியற்றவர்கள் என்று நோட்டீஸ் பலகையில் ஒட்டியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
`சட்டப்பேரவைத் தேர்தலின் போது 5 பவுனுக்குள் கடன் வைப்பவர்கள் அனைவருக்கும் தள்ளுபடி கிடைக்கும் என்று கூறியவர்கள் தற்போது எங்களுக்கு கடன் தள்ளுபடி செய்ய தகுதி இல்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது' எனப் பெண்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Also Read: `` நகைக்கடன் மோசடியில் தொடர்புடையவர்கள்மீது கிரிமினல் நடவடிக்கை" - அமைச்சர் ஐ.பெரியசாமி
இந்நிலையில், பெண்கள் மாலை வரை காத்திருந்தும் வேளாண்மை கூட்டுறவு சங்க அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்காததால் ஆத்திரமடைந்த பெண்கள் சங்கத்தில் வைக்கப்பட்டிருந்த நோட்டீஸ் பலகையுடன் வந்து தேனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த தேவதானப்பட்டி போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து பெண் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
source https://www.vikatan.com/news/agriculture/theni-women-protested-as-cooperative-bank-removes-their-name-from-jewel-loan-waiver
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக