கடந்த சில ஆண்டுகளாகவே கிரிப்டோ கரன்சி பயன்பாடு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் கிரிப்டோ கரன்சி அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை தீவிரமாகக் கண்காணிக்க ஆரம்பித்திருக்கிறது.
இந்த நிலையில், கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு கிரிப்டோ கரன்சி மற்றும் அது தொடர்பான விஷயங்கள் குறித்து மத்திய அரசு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ரிசர்வ் வங்கி, நிதித்துறை அதிகாரிகளுடன் இந்த ஆலோசனை நடைபெற்றது.
இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த் சின்ஹா கிரிப்டோகரன்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கிரிப்டோகரன்சி வளர்ந்துவரும் இந்தியாவுக்கு அதிகம் தேவைப்படுவதாகவும், உலகளாவிய கிரிப்டோ வளர்ச்சியை இந்தியாவும் ஆதரிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாதவும், அதுமட்டுமன்றி கிரிப்டோகரன்சிக்கான வரி விதிப்புகள் குறித்து நிதித்துறை மற்றும் வருமான வரித்துறைகள் ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவில் கிரிப்டோகரன்சியை வைத்திருப்பவர்கள் மற்றும் முதலீடு செய்துள்ளவர்கள் 100 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதாக வெளியான தகவல் ஏற்கும்படி இல்லை என்றும், இந்தியத் தொழில் துறை பிரதிநிதிகள் நடத்திய ஆராய்ச்சியில் 1.5 கோடி இந்தியர்கள் கிரிப்டோகரன்சியில் வர்த்தகம் செய்வதாகவும் அதில் 6 பில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சி சொத்துகளை இந்தியர்கள் வைத்துள்ளாதகவும் அவர் கூறியுள்ளார்.
கிரிப்டோ வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஏற்கெனவே கருத்து தெரிவித்து இருந்தார். பிரதமர் மோடி தலைமையிலான கிரிப்டோகரன்சி ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு பேசிய அவர், ``கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் ஆழமான பிரச்னைகள் இருக்கின்றன. நன்றாகப் பரிசீலித்த பிறகு ரிசர்வ் வங்கி இதைச் சொல்கிறது. நாட்டின் பொருளாதாரத்துக்கும், நிதி ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக அது உருவெடுக்கக்கூடும். இதுதொடர்பாக மிகவும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டும்.
கிரிப்டோகரன்சியில் கணக்கு தொடங்குவதற்காக முதலீட்டாளர்களுக்கு கடன் அளிக்கப்படுவதாக நாங்கள் கேள்விப்பட்டோம். அவர்களைக் கவர வேறு சில ஊக்கச் சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. அதனால் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.
மேலும், கிரிப்டோகரன்சி என்பதை முதலீட்டாளர்கள் சொத்தாக வேண்டுமானால் பாவிக்கலாமே ஒழிய, அதை ஒரு கரன்சியாகப் பயன்படுத்த முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
``கிரிப்டோகரன்சி வளர்ந்துவரும் தொழில்நுட்பம் என்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறது. இதை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணிக்கும் மற்றும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும். அரசாங்கத்தால் இந்த துறையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் முற்போக்கானதாகவும், முன்னோக்கிப் பார்க்கக்கூடியதாகவும் இருக்கும் என்பதில் ஒருமித்த கருத்து உள்ளது” என்று அரசு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.
Also Read: பிட்காயினுக்கும் வரி விதிக்க தயாராகிறதா மத்திய அரசாங்கம்? அதிர்ச்சியில் கிரிப்டோ முதலீட்டாளர்கள்
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யுமாறு இளைஞர்களைத் தவறான பாதையில் அழைத்துச் சென்றுவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு தெளிவாக உள்ளது. அதனால்தான் கிரிப்டோ கரன்சிக்குத் தடையும் விதிக்காமல் முழுமையாகவும் ஆதரிக்காமல், அதன் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. விரைவில் கிரிப்டோ கரன்சி தொடர்பான சட்ட திட்டங்கள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
source https://www.vikatan.com/business/news/why-rbi-governor-sakthi-kantha-das-warns-about-cryptocurrency-transactions
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக