Ad

வெள்ளி, 19 மார்ச், 2021

10,000 செயற்கை கூடுகள், சிறப்பு காப்பிடங்கள்... சிட்டுக்குருவிகளுக்காகப் பாடுபடும் `குருவி' கணேசன்!

வீடுகளில் அம்மா, அரிசியை முறத்தில் போட்டுப் புடைக்கும்போதோ, கம்பு, சோளம் போன்றவற்றை உரலில் போட்டு உலக்கையால் குத்தும்போதோ, வெளியே தெறிக்கும் சிதறல்களைச் சாப்பிட வாசலைச் சுற்றி சிட்டுக்குருவிகளும் தவிட்டுக் குருவிகளும் கூட்டம் கூட்டமாய் கூடும். எப்படியேனும் ஒரு சிட்டுக்குருவியையாவது பிடித்து வளர்த்துவிட வேண்டுமென்று, விடுமுறை நாள்களில், அம்மாவின் உரலுக்கு அருகிலேயே காத்துக்கிடந்த நாள்கள் பல.

சிட்டுக்குருவி

அப்போதெல்லாம் வீட்டைச் சுற்றியிருக்கும் வேப்ப மரத்தடியில் சிட்டுகளின் அழைப்புகளைக் கேட்டுக்கொண்டே விளையாடிய 90-களின் தலைமுறைகளுக்கு அவற்றோடான நினைவுகளுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால், 2000-ம் ஆண்டுக்குப் பிறகு, நகர்ப்புறங்களில் வளர்ந்த குழந்தைகள், சிட்டுக்குருவியின் படத்தைப் பாட நூல்களில்தான் அதிகமாகப் பார்த்துள்ளனர். சிட்டுக்கள் அழிந்துகொண்டிருப்பதுதான் இதற்குக் காரணம் என்று பலரும் கடந்த சில ஆண்டுகளில் பேசிக் கொண்டிருந்தாலும், அது உண்மையில்லை என்று சமீபகாலமாக மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். நகர்ப்புறங்களில் அவற்றுக்கு ஏற்பட்ட வாழிடப் பற்றாக்குறையால், புறநகர்ப் பகுதிகளுக்கு அவை இடம் பெயர்ந்ததே காரணம் என்று தொடர்ச்சியான விழிப்புணர்வுகளின் வழியே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஒருகாலத்தில், திரும்பிய திசையெங்கும் உலவிக் கொண்டிருந்த, இந்தப் பறவைகளின் இருப்பு, நகரங்களில் திடீரென எப்படிக் குறைந்தது என்ற கேள்வி பலருக்கும் உண்டு.

1990-களின் இறுதியிலிருந்து இந்த மாற்றம் தொடங்கியது. நகர்ப்புறங்களின் கட்டுமானங்களில் நிகழ்ந்த மாறுதல்கள், சிட்டுக்குருவிகள் கூடுகட்டி வாழ்வதற்குரிய அமைப்பைப் பெற்றிருக்கவில்லை. கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த தீவிர வளர்ச்சி, அவற்றின் இருப்புக்குத் தேவையான வாழிடம் மற்றும் உணவில் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, அவை மெல்ல மெல்ல, நகரங்களைவிட்டு, அவற்றுக்குத் தகுந்த வாழிடங்களைத் தேடி புறநகர் மற்றும் ஊர்ப்பகுதிகளை நோக்கி செல்லத் தொடங்கின. ஆரம்பத்தில், அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. திடீரென ஒருநாள் சிட்டுக்குருவிகள் கண்ணில் படுவதே அரிதாகிப் போனபோதுதான், ``அடடா, சிட்டுக்குருவிகளையே காணோமே!" என்று தேடத் தொடங்கினோம். அதன் விளைவாக உருவானதுதான் சிட்டுக்குருவிகள் தினம். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் 20-ம் தேதியன்று இது கொண்டாடப்படுகின்றது. இந்தத் தினத்தன்று பலரும் சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு மட்டுமன்றி பறவைகள் பாதுகாப்பு குறித்தும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுக்கின்றனர்.

சிட்டுக்குருவி

ஆரம்பத்தில், செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சுதான் காரணமென்று ஒரு வதந்தியை யாரோ ஒருசிலர் கிளப்பிவிடவே, அதையே அடிப்படையாக வைத்து சினிமா எடுப்பது வரை, அந்தப் புரளி தீயாகப் பரவியது. பின்னர் பல்வேறு தன்னார்வலர்கள் மற்றும் பறவை ஆய்வாளர்களின் தொடர்ச்சியான விழிப்புணர்வால், செல்போன் கோபுரங்களுக்கும் குருவிகளின் எண்ணிக்கை குறைவதற்கும் தொடர்பிருப்பதாக இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதை மக்கள் ஓரளவுக்குப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளார்கள். இந்நிலையில், அவை நகர்ப்புறங்களில் என்னென்ன காரணங்களால் குறைந்தன என்பதைக் கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்யும் முயற்சிகளில் பலரும் இறங்கியுள்ளனர்.

சென்னை பெருநகரத்தில் அப்படிப்பட்டதொரு பெருமுயற்சியை `கூடுகள்' அமைப்பு மேற்கொண்டு வருகிறது. சூழலியல் ஆர்வலர்.பேரா.த.முருகவேளின் தூண்டுதலால், 2014-ம் ஆண்டு சிட்டுக்குருவிகளுக்கென செயற்கைக்கூடு அமைக்கும் முயற்சியை கூடுகள் அமைப்பைத் தோற்றுவித்த பேரா.து.கணேசன் தொடங்கினார். இந்தப் பறவையினம், நகர்ப்பகுதியில் பிழைத்திருக்க முடியாமல் போவதற்கு முதல் காரணம், அவை கூடுகட்டி இனப்பெருக்கம் செய்வதற்குரிய வசதி இல்லாமல் போனதுதான். நாம் சிறுவயதில், வீட்டு ஓடுகளிலுள்ள இடுக்குகளிலும் சுவற்றில் கிடைக்கும் சிறு சிறு சந்துகளிலும் சிட்டுக்கள் கூடு கட்டியிருப்பதைப் பார்த்திருப்போம்.

தயாரிக்கப்படும் கூடுகள்

அப்படிப்பட்ட அமைப்புகள், இன்றைய நவீன மயமான கான்க்ரீட் காடுகளில் கிடைப்பதில்லை. அதை முதலில் முடிந்தளவுக்குச் சரி செய்யவேண்டுமென்று பேரா.த.முருகவேள் மற்றும் அவருடைய முன்னாள் மாணவர் பேரா.து.கணேசன் நினைத்திருக்கின்றனர். அதனால் செயற்கையான கூடுகளை முதலில் வெளியே வாங்கி, மக்களிடையே அவரவர் வீடுகளில் பொருத்தி வைக்க ஊக்குவிக்கத் தொடங்கினார் கணேசன். ஆனால், ஆரம்பத்தில் மக்கள் அதற்குப் பெரிதாக ஒத்துழைக்கவில்லை. மேலும், ஒரு கூடு வாங்கத் தோராயமாக ரூ.200 முதல் ரூ.300 வரை ஆகின்றது. இந்நிலையில், தொடர்ந்து அவ்வளவு செலவு செய்து இந்த முயற்சியை மேற்கொள்ள முடியவில்லை. ஆகையால், தானே கூடுகளைச் செய்துகொண்டால் என்னவென்று தோன்றவே, அதற்கான இயந்திரம் ஒன்றையும் கணேசன் வாங்கினார்.

விடாமுயற்சியோடு, சிட்டுக்குருவிகளுக்கான வாழிடத்தை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டவர், ஆங்காங்கே மக்கள் மத்தியில் இலவசமாகக் கூடுகளை விநியோகித்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த அளவுக்கான விழிப்புணர்வைக் கொண்டு சேர்க்க முடியாமல் திணறியபோது தான், மாணவர்கள் மீது அவர் கவனம் திரும்பியது.

``பொது மக்களிடையே செல்வதைவிட, ஏன் மாணவர்களிடம் சென்று இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடாது என்று தோன்றியது. 2018-ம் ஆண்டு ராயபுரத்திலிருக்கும் தனலட்சுமி மேல்நிலைப்பள்ளியில் முதல்கட்டமாக 15 மாணவர்களுக்குக் கூடுகளை வழங்கினேன். அவர்கள் ஆர்வமாக வீட்டுக்குச் சென்று, ஒரு பாதுகாப்பான இடத்தில், சிட்டுக்களுக்கு உகந்த சூழலில் பொருத்தினார்கள். அவர்களுடைய பெற்றோரே அதைப் படமெடுத்து எனக்கு அனுப்பி ஊக்குவித்தனர். அப்போதுதான், மாணவர்கள் மூலமாகச் சென்றால் அவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும் விழிப்புணர்வைக் கொண்டு சேர்க்க முடியும் என்று புரிந்தது."

பேரா.து.கணேசன்

அவர் வழங்கிய அந்தப் பதினைந்து கூடுகளுக்குக் கிடைத்த எதிர்வினை ஊக்கமளிக்கவே, அவர் மேன்மேலும் கூடுகளைத் தயாரிக்கத் தொடங்கினார். செலவைக் குறைத்துக் கொள்வதற்காக வாங்கிய கூடு தயாரிக்கும் இயந்திரத்தில், அவரும் அவருடைய மனைவியும் சேர்ந்து ஆரம்பத்தில் 300 கூடுகளைத் தயாரித்து அவர்களுக்குத் தெரிந்த மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பொருத்தினார்கள். அதைத்தொடர்ந்து, தன் மனைவியின் உதவியோடு 1,500 கூடுகளைத் தயாரித்தார். அவற்றையும் மாணவர்களிடமே கொண்டு சென்றார்கள். மாணவர்களின் மூலமாக, அந்தக் கூடுகளும் மத்திய சென்னை, வடசென்னை என்று சிட்டுக்குருவிகளுக்காகப் பல வீடுகளில் காத்திருக்கத் தொடங்கின.

தனலட்சுமி மேல்நிலைப் பள்ளி நிர்வாகம், இவருடைய முயற்சியின் இன்றைய தேவையைப் புரிந்துகொண்டு, அவர்களுடைய வளாகத்திலேயே கூடுகள் தயாரிப்பதற்கென தனி கட்டடத்தை ஒதுக்கிக் கொடுத்துள்ளது. பின்னர், இவர்களே தயாரித்துக்கொண்டிருப்பதைவிட, மாணவர்களுக்கும் கூடுகள் தயாரிக்கக் கற்றுக்கொடுத்தால், இந்த முயற்சி இன்னும் பரவலாகுமே என்று கணேசன் நினைத்துள்ளார். அவருடைய மாணவர்களில் சிலரும் உடன் பணிபுரியும் பேராசிரியர்களும் உதவ முன்வரவே, இணைந்து பள்ளிகளில் கூடுகள் தயாரிக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்தத் தொடங்கினார்.

பள்ளி மாணவர்களுக்காக கூடுகள் அமைப்பு நடத்திய பயிற்சி வகுப்பு

அதுகுறித்துப் பேசிய பேரா.து.கணேசன், ``நானும் மனைவியுமாகச் சேர்ந்து தயாரித்த 1,500 கூடுகள் போக, நண்பர்களின் உதவியோடு தயாரித்த கூடுகள் மற்றும் மாணவர்களே தயாரித்த கூடுகளென்று இதுவரை 2,500 கூடுகளைத் தயாரித்துள்ளோம். அதில், சுமார் 60 சதவிகிதக் கூடுகளைச் சிட்டுக்குருவிகள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. அதற்கு கூடுகளை வைக்கும் இடமும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. கூட்டை வைக்கும் இடம் அவற்றுக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.

அப்படி வைக்கப்பட்ட கூடுகளில், லாக்டௌன் நேரத்தில்தான் அதிக அளவில் சிட்டுக்கள் வருகை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளிகளில் கூடுகளை அமைக்கும் முயற்சிகளின் வழியே, ஒவ்வொரு பள்ளியிலும் சிட்டுக்குருவிகளுக்கான சிறு காப்பிடங்களை உருவாக்க முயன்றேன். அந்த முயற்சியின் முதல் வெற்றியாக, திருவொற்றியூரிலுள்ள ரேவர் பத்மநாப செட்டி மெட்ரிகுலேசன் பள்ளியில் சுமார் 200 சிட்டுக்குருவிகளோடு சிறு காப்பிடமொன்று உருவாகியுள்ளது. இதுவரை 4 பள்ளிகளில் இதுபோன்ற சிறு காப்பிடங்களை உருவாக்கியுள்ளோம்" என்று கூறினார்.

திருவொற்றியூரிலுள்ள ஒரு பள்ளியில் கூடுகள் அமைப்பின் முயற்சியால் உருவான அந்தச் சிறிய சிட்டுக்குருவிகள் காப்பிடத்தைப் போலவே, சென்னையில் இன்னும் பல பள்ளிகளில் உருவாக்க முயன்று வருகிறார் கணேசன். மேலும், அவருடன் இணைந்து செயல்படும் சில இயந்திரவியல் மாணவர்கள், கூடுகளைக் குறைந்த செலவிலும் விரைவாகவும் தயாரிக்க உகந்த வகையிலான இயந்திரம் ஒன்றை உருவாக்கி வருகின்றனர். அந்த வேலை முடிந்தால், சிட்டுக்குருவிகளுக்கான வாழிடங்களை இன்னும் வேகமாக மீட்டுருவாக்க முடியுமென்று நம்பிக்கையோடு பேசினார் கணேசன்.

கூட்டுக்குள் புதிதாகப் பிறந்த சிட்டுக்குருவிக் குஞ்சுகள்

ஆரம்பத்தில் 15 கூடுகளில் தொடங்கிய அவருடைய ஆர்வம், 1,500 கூடுகளைத் தயாரிக்க உந்தியது. அந்த ஆர்வத்தாலும் சிட்டுக்கள் மீதான அக்கறையாலும் தற்போது மேலும் 10,000 கூடுகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். 2019 ஜூலை மாதம் அவர் உருவாக்கிய `கூடுகள்' குழு தற்போது 10,000 கூடுகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவ்வளவு கூடுகளைத் தயாரிக்க சுமார் 10 லட்சம் ரூபாய் செலவாகும். அதில், இதுவரை 5 லட்சம் ரூபாயைத் திரட்டி, கூடுகளைத் தயாரித்து வருகிறார்.

இந்த முயற்சியை அவர் தொடங்கும்போது தனிநபராக, மக்களையும் மாணவர்களையும் அணுகினார். இப்போது, பல மாணவர்களும் நண்பர்களும் அவருக்குக் கைகொடுத்து உதவுகின்றனர். எப்படியாவது 10,000 கூடுகளைத் தயாரித்து, சென்னை முழுக்க சிட்டுக்குருவிகளுக்கான வாழிடத்துக்கு வழி செய்ய வேண்டுமென்று முயன்று கொண்டிருக்கிறார்.

அதைச் செய்துமுடிக்க அவருக்கு நிதிப் பற்றாக்குறை நிலவுகின்றது. தற்போது அதைச் சரிக்கட்டுவதற்காக முயன்று கொண்டிருக்கிறார்.

சிட்டுக்குருவிகளுக்காக கூடு தயாரிக்கும் மாணவர்கள்

Also Read: பறவைகளைக் காண தினமும் 30 கி.மீ பயணிக்கும் சிட்டுக்குருவி காதலன் அஜிஸ்! #WorldSparrowDay

இவைபோக மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், கடந்த ஆண்டு சிட்டுக்குருவி பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 17 மாணவர்களுக்கு `Sparrow Saver Award 2020' என்ற விருதை வழங்கிப் பெருமைப்படுத்தவுள்ளார்.

உலக சிட்டுக்குருவிகள் தினத்தன்று, அவற்றின் வாழிட மீட்டுருவாக்கத்துக்காக முயன்று கொண்டிருக்கும் `குருவி கணேசன்' போன்ற மனிதர்களைக் கொண்டாடுவதோடு, அவருடைய முயற்சிக்கு கைகொடுப்போம். அதுவே, எதிர்காலத்தில் நம் குழந்தைகள் அவர்களைச் சுற்றியுள்ள உயிரினங்களைப் புரிந்துகொண்டு, அவற்றோடு இயைந்து வாழ்வதற்குரிய சூழலை உருவாக்குவதற்கான தொடக்கமாக இருக்கும்.



source https://www.vikatan.com/news/environment/professor-ganesan-tries-to-set-up-habitats-for-sparrows-in-chennai-and-nearby-places

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக