திதிகளில் ஏகாதசியும் துவாதசியும் பெருமாள் வழிபாட்டு உகந்தவை. அந்த நாளில் பெருமாளின் திருநாமத்தை ஜபிப்பதோ அவரின் நாமத்தை சங்கீர்த்தனம் செய்வதோ அல்லது அவரின் புகழ் சொல்லும் கதைகளைக் கேட்டுக்கொண்டிருப்பதோ நம் பாவங்களைத் தீர்ப்பதோடு புண்ணிய பலன்களையும் தரும். அதிலும் திருமலையில் அருளும் வேங்கடவனின் பெருமை மிகுந்த இனிய சரித்திரங்களைக் கேட்பது என்றால் புண்ணியமும் மகிழ்வும் தரும் செயல் அல்லவா... அதிலும் இன்று துவாதசி திதி. இந்த நாளில் பெருமாளின் திருவிளையாடல் ஒன்றை அறிந்துகொள்ளலாம்.
கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் திருமலை பெருமாள். இதை பக்தர்கள் அனைவரும் நம்புகிறார்கள். அதற்குக் காரணம் பல பக்தர்கள் தாங்கள் பெருமாளைக் கண்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதே ஆகும். பெருமாள் பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பவர் மட்டுமல்ல அவர்களோடு திருவிளையாடலும் புரிபவர். அப்படி அவர் ஓர் இசைமேதையோடு நிகழ்த்திய விளையாடல் அற்புதமானது.
கர்நாடக மாநிலத்தில் ரகுநாதன் என்னும் இசை மேதை வாழ்ந்துவந்தார். அவருக்கு விட்டலன் மேல் எவ்வளவு பக்தியோ அவ்வளவு பக்தி திருப்பதி வேங்கடமுடையான் மேலும் இருந்தது. அவர் வாழ்ந்த காலத்தில்தான் திருப்பதியில் அன்னமாசார்யரும் வாழ்ந்துவந்தார். வேங்கடவனையும் அவரின் அடியவரான அன்னமைய்யாவையும் தரிசிக்கலாம் என்று ஆவல்கொண்ட ரகுநாதன் திருப்பதிக்குத் தன் மனைவியோடு சென்றார்.
வேங்கடவனைக் கண்குளிர தரிசனம் செய்து பிறகு அன்னமையாவையும் சென்று சேவித்தார். இருவரும் இசை தொடர்பாகப் பேசிக் கொண்டு காலம் கழித்தனர். தினமும் இறை தரிசனமும் அடியாருடன் பேசுவதும் ரகுநாதனின் வாடிக்கை ஆகிவிட்டது.
அந்தக் காலத்தில் திருமலையில் ஓர் அதிசயம் நிகழும். அதை அனைவரும் அறிவர். ஆனால் ரகுநாதன் அதைக் கேள்விப்பட்ட நேரத்தில் இருந்து மனதில் ஆர்வமும் அதை அறிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆசையும் பெருகியது. அது வேறு ஒன்றும் அல்ல. திருமலையில் புரந்தரி என்னும் நாட்டியப் பெண்மணி வாழ்ந்துவந்தார். அவருக்குப் பெருமாள் மீது பக்தி அதிகம். தினமும் ஆலயம் மூடப்பட்டபின்பு புரந்தரி சென்று ஆலய வாசலில் நின்று வீணை இசைப்பாள். கதவுகள் தானாகத் திறந்துகொள்ளும். உள்ளே சென்று புரந்தரி வீணை இசைக்க பெருமாள் அவள் முன்னே தோன்றுவார். புரந்தரியின் கையிலிருந்து வீணையைப் பெற்றுக்கொண்டு அதைப் பெருமாள் இசைக்க புரந்தரி நடனமாடுவாள். இது திருமலையில் தினமுமே நடந்துவருவதாக ஐதிகம். ஆனால் இதை வேறு யாராலும் காணமுடியாமல் இருந்தது. இதைக் கேள்விப்பட்ட ரகுநாதன் புரந்தரியை அணுகி வணங்கினார்.
தனக்கும் பெருமாள் தரிசனம் கிடைக்கும்படிச் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். புரந்தரியும் அதற்கு இசைந்தார். இன்று இரவு என்னோடு வாருங்கள், ஆனால் தூணுக்கு மறைவில் இருந்துதான் பார்க்க வேண்டும் என்ற கட்டளையோடு ஏற்றுக் கொண்டார்.
இரவு வந்தது. புரந்தரி வீணையோடு கோயில் வாசல் வந்தார். வீணை இசைத்தார். கதவு திறந்துகொண்டது. உள்ளே சென்றார். அவர் பின்னாலேயே சென்ற ரகுநாதன் தூணுக்குப் பின் மறைந்து நின்றார். புரந்தரி வீணை இசைக்க சில நிமிடங்களில் பெருமாள் அங்கே பிரத்யட்சமாய்த் தோன்றினார். ரகுநாதனுக்கு உடல் சிலிர்த்துவிட்டது. பெருமாள் புரந்தரியின் கையிலிருந்த வீணையை வாங்கி மீட்ட ஆரம்பித்தார். புரந்தரியும் அதற்கேற்ப நடனமாட ஆரம்பித்தார். ரகுநாதர் அந்த ஆனந்தக் காட்சியைக் கண்டு திகைத்து நின்றார்.
இந்த உலகில் பெருமாளின் கண்களுக்கு மறைவான இடம் என்று ஒன்று இருக்கிறதா என்ன? அதுவும் அவன் ஆலயத்துக்குள்ளேயே... ரகுநாதனைத் தானே வெளிப்பட வைக்க வேண்டும் என்று பெருமாள் திருவுளம் கொண்டார். தான் மீட்டிக்கொண்டிருந்த வீணையில் அபசுரமாய் வாசிக்க ஆரம்பித்தார். புரந்தரியோ பெருமாளின் சந்நிதானம் என்னும் பெரும் சிலிரிப்பில் ஆடிக்கொண்டிருப்பதால் அவளுக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் ரகுநாதருக்கு அபசுரம் தொந்தரவு செய்தது. ஒரு கட்டத்தில் அவர் தன்னையும் மீறி, ‘உங்கள் அபசுரத்தை நிறுத்துங்கள்’ என்று கத்தியபடியே தூணுக்குப் பின்னிருந்து வெளிப்பட்டார் ரகுநாதன். பெருமாள் சிரித்தார். ரகுநாதனோ சிலிர்த்தார்.
பெருமாளையே அதட்டிய தன் பிழை குறித்து வருந்தினார். பின் அவர் திருப்பாதங்களில் விழுந்து சேவித்தார். பெருமாள் அவரை ஆசீர்வதித்துத் தன் கையிலிருந்த வீணையை அவரிடம் தந்து வாசிக்கச் சொன்னார். ரகுநாதன் மரியாதையோடு அந்த வீணையை வாங்கி இசைக்க ஆரம்பித்தார். இப்போது புரந்தரியும் வேங்கடவனும் இணைந்து நடனமாடினர். ரகுநாதன் தன் பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தார்.
நடனம் முடிந்ததும் பெருமாள் புரந்தரியிடம், “புரந்தரி, நீ ரகுநாதனுக்கு உபதேசம் செய்வாயாக. இனி அவன் புரந்தர தாசன் என்று அழைக்கப்பட்டு இசை உலகில் மேதையாகத் திகழ்ந்து பக்தியை வளர்ப்பான் “ என்று கூறி மறைந்தார். அதேபோன்று புரந்தரி ரகுநாதனுக்கு உபதேசம் செய்தார். அன்றுமுதல் ரகுநாதனுக்கு ‘புரந்தரதாசர்’ என்று பெயர் ஏற்பட்டது. புரந்தரதாசர் வாழ்நாள் முழுவதும் பெருமாளின் சிறப்புகளைப் பாடியே காலம் கழித்தார். இன்றும் கர்நாடக இசை பயிலும் யாரும் புரந்தர தாசரின் கீர்த்தனைகளைக் கற்காமல் இருக்க முடியாது.
இந்த துவாதசி நன்னாளில் திருப்பதி பெருமாளை தியானித்து நம் பணிகளைத் தொடங்குவோம். அனைத்தையும் அவன் அருள் சிறப்பாக நடத்தித் தரும்.
source https://www.vikatan.com/spiritual/gods/spiritual-story-about-tirupati-perumal
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக