Ad

சனி, 6 பிப்ரவரி, 2021

`விவசாயிகள் போராட்டத்துக்குக் காரணம் அரசியல் அல்ல; சட்டங்கள்தான்!’ - கே.எஸ்.அழகிரி

``4 ஜி அலைக்கற்றை வந்த பின்னர். பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்குக் கொடுக்காமல் ஏன் தனியார் நிறுவனங்களுக்கு மோடி கொடுத்தார். மத்திய அரசின் தவறான நடைமுறையால் பி.எஸ்.என்.எல் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துப்போய்விட்டது. இன்னும் பல துறைகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இவர் மக்களுக்கான பிரதமர் அல்ல. கார்ப்பரேட் முதலாளிகளின் நண்பன் என்பதனை அவர்கள் வெளியிட்ட பட்ஜெட்டில் நன்றாகத் தெரிகிறது’’ என்று மத்திய, மாநில அரசுகள் கடுமையாக விமர்சனம் செய்தனர் காங்கிரஸ் கட்சியினர்.

கே.எஸ் அழகிரி

திருச்சி மாவட்டம் முசிறியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ``ஏர்கலப்பை பேரணி" பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி, தேசியச் செயலாளர் சஞ்சய் தத், விளவங்கோடு எம்.எல்.ஏ விஜயதாரணி, திருச்சி காங்கிரஸ் வடக்கு மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏர்கலப்பை பேரணி என்கிற தலைப்பில் நாடாளுமன்ற வளாகம் போல் பிரமாண்டமாக மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கானோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

எம்.எல்.ஏ விஜயதாரணி பேசுகையில்,``மத்திய அரசின் வேளான் சட்டங்கள் விவசாயிகளுக்குத் தேவையில்லை. முழுக்க முழுக்க கார்ப்ரேட்டுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கவே மத்திய பா.ஜ.க அரசுத் திட்டம் போடுகிறது. இதை மாநில அரசு உணர வேண்டும். டெல்லியில் போராட்டத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் மிகவும் கொடுமையானதாக உள்ளது.

விஜயதாரணி

தமிழகம் முழுவதும் தலைவர் கே.எஸ் அழகிரி அவர்களின் தலைமையில் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேரணி நடைபெற்று வருகிறது. இந்த சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை நம்முடைய பேரணி தொடரும். போலீஸாரை வைத்துக்கொண்டு நம்மை அடக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள் அது ஒருபோதும் முடியாது. அடக்க அடக்கத்தான் வீறுகொண்டு எழுவார்கள். அதுபோலத்தான் நாமும் எழவேண்டும்’’ என்று ஆவேசமாகப் பேசினார்.

அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத் பேசுகையில், ``விவசாயிகளுக்குத் துரோகம் செய்யும் வேளாண் சட்டங்களை அ.தி.மு.க அரசு எதிர்க்காதது ஏன்? நான் கேட்கிறேன். விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் என்று தெரிந்தும் ஒ.பி.எஸ், இ.பி.எஸ் விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காதது ஏன்? இவர்கள் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வதற்காகவே இது போன்ற சட்டங்களை ஆதரிக்கிறார்கள். அ.தி.மு.க அரசைத் தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்பத் தயாராகிவிட்டார்கள், அதற்கான நேரம் வந்து விட்டது. உலகிலேயே தலைசிறந்த மாநிலமாகத் தமிழகத்தை மாற்றக் காங்கிரஸ் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக உள்ளோம்’’ என்றார்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஏர்கலப்பை பேரணி

அதன்பின்னர் பேசிய கே.எஸ் அழகிரி, ``ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியில் பொறுப்புகள் 5 பேரிடம் இருந்தது. ஆனால், இன்று 500 பேரிடம் அதை நாங்கள் கொடுத்துள்ளோம். அதிகாரப் பரவல் காங்கிரஸ் கட்சியில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. தமிழகத்தில் 50 ஆண்டுகளாக நாம் அதிகாரத்தில் இல்லை. ஆனால், பலர் மத்தியில் ஒரு துடிப்பு உள்ளது. காங்கிரசால்தான் சரியாக ஆட்சி செய்ய முடியும் என்று. விபத்தின் காரணமாக மட்டுமே பா.ஜ.க ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து இருக்கிறார்கள். அவர்களைத் தூக்கி எரியும் தைரியம் ராகுல் காந்திக்கு உள்ளது. காங்கிரசால் கொண்டு வரப்பட்டது 100 நாள் வேலைத் திட்டம், ஏழை, எளிய வயதான பலருக்கு அது உதவிக்கரமாக உள்ளது. மோடியையும் எடப்பாடியைப் பார்த்துக் கேட்கிறேன். உங்களால் உருப்படியான ஒரு திட்டத்தையாவது கொண்டு வர முடிந்ததா?

விவசாயிகளின் போராட்டத்துக்குக் காரணம் அரசியல் அல்ல; சட்டங்கள் தான். அதனை முதலில் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். போராடுவதால் விவசாயிகளைத் தீவிரவாதிகள் போல் சித்தரித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. 4 ஜி அலைக்கற்றை வந்த பின்னர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்குக் கொடுக்காமல் மற்ற தனியார் நிறுவனங்களுக்கு மோடி கொடுத்தார். இதனால் அரசின் பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் சிறுக சிறுக செத்துப் போய்விட்டது.

பொதுமக்கள்

பொதுத்துறை நிறுவனங்களை அழித்து தனியார் நிறுவனத்தை வளர்ப்பதே மோடியின் வேலை. இதைத் தான் ராகுல் காந்தி எல்லா இடங்களிலும் பேசி வருகிறார். உயர் நீதிமன்றம் எடப்பாடி அரசின் மீது தவறு உள்ளது என்று கூறுகிறது. இடைக்காலத் தடை வாங்கி சி.பி.ஐ விசாரணை செய்ய முடியாமல் செய்து விட்டனர். மோடியின் நண்பர் எடப்பாடி என்பதால் சி.பி.ஐ வாய்மூடி உள்ளது. எதிர்க்கட்சிகள் பலம் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகத் தான் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை எடப்பாடி வெளியிட்டு இருக்கிறார்.

கே.எஸ் அழகிரி

அரசியல் காரணங்களுக்காகத் தான் எடப்பாடி இதைச் செய்து இருக்கிறார் என்பது விவசாயிகளுக்குத் தெரியும். விவசாயிகளுக்கு நல்லது செய்வதாக இருந்தால் கண்டிப்பாக விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, மத்திய அரசை அல்லவா குறை சொல்லியிருக்கவேண்டும். இவர் அதனைச் செய்வாரா? இத்தனை ஆண்டுகாலமாக ஆட்சியிலிருந்துவிட்டு இப்போது கடனை தள்ளுபடி செய்திருப்பதாகப் பேசுகிறார். முதல்வரின் அரசியல் நாடகத்தை மக்கள் நன்கு அறிவார்கள்’’ என்றார்.



source https://www.vikatan.com/news/politics/congress-state-committee-chief-ks-alagiri-slams-admk-and-bjp-government-over-farm-laws

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக