Ad

வியாழன், 17 செப்டம்பர், 2020

India-China standoff: `சந்தேகம் வேண்டாம்... நமது எல்லைகளைப் பாதுகாப்பது உறுதி!’ - ராஜ்நாத் சிங்

இந்திய - சீன எல்லைப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. டோக்லாம் தொடங்கி கல்வான் பள்ளத்தாக்கு மோதல் வரை பல்வேறு இடங்களில் சீனாவின் அத்துமீறலை இந்தியா தொடர்ந்து முறியடித்ததோடு, கிழக்கு லடாக்கின் பாங்கோங் சோ ஏரியைச் சுற்றியிருக்கும் முக்கியமான பகுதிகளையும் கைப்பற்றியது.

இது தொடர்பாக மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது இரு நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஜெய்சங்கரும், வாங் யீ-யும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அந்தச் சந்திப்பின்போது எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொடர்பான ஐந்து அம்சத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்கட்கிழமை டெல்லியில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில், லடாக் எல்லை நிலவரம் குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டதால், காங்கிரஸ் எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்தனர். இது குறித்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, ``கடந்த 1962 போரின்போது மக்களவையில் விவாதம் நடத்த வாஜ்பாய் வலியுறுத்தியதை நேரு ஏற்றுக்கொண்டார். ஆனால், தற்போது நரேந்திர மோடி அரசு விவாதத்துக்கு அஞ்சுகிறது’’ என்றார்.

எல்லையில் படை

இதற்கு பதிலளிக்கும்விதமாக, மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான செவ்வாய்க் கிழமையன்று பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``எல்லையில் நிலவும் அமைதியைக் குலைக்கும் வகையில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் சீனா நடந்துகொண்டது. அதற்கு இந்திய ராணுவமும் உரிய பதிலடி கொடுத்தது. `இது போன்ற சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று சீனாவிடம் நாம் தெரிவித்துவிட்டோம். இருப்பினும் எல்லைப் பகுதிகளில் சீனா தொடர்ந்து அத்துமீறல் சம்பவங்களில் ஈடுபட்டுவருகிறது.

Also Read: `லடாக் எல்லையில் பஞ்சாபிப் பாடல்களை ஒலிக்கவிடும் சீன ராணுவம்!’ - ஏன் தெரியுமா?

யூனியன் பிரதேசமான லடாக்கில் 38,000 சதுர கி.மீ பகுதியை சீனா தன்னுடையது என்கிறது. அதேபோல், அருணாச்சலப்பிரதேசத்தில் இந்திய - சீன எல்லைப் பகுதியின் கிழக்குப் பகுதியிலுள்ள 90,000 சதுர கி.மீ பகுதியைச் சொந்தம் கொண்டாடிவருகிறது. இதற்கு ஆதாரமாக 1993-ம் ஆண்டு கையொப்பமான சீனா-பாகிஸ்தான் உடன்படிக்கையை அந்த நாடு சொல்லிவருகிறது. ஆனால், அந்தப் பகுதிகள் நம்முடைய ஆளுகைக்குட்பட்டவை. இந்தியா - சீனா இடையிலான பாரம்பர்ய எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி தொடர்பான ஆவணங்களை ஏற்க சீனா தொடர்ந்து மறுத்துவருகிறது.

எல்லைப் பிரச்னை முழுமையாகத் தீர்க்கப்படாத நிலையில், எந்தச் சூழலையும் சமாளிக்கும் வகையில் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் தயார்நிலையில் இருக்கின்றன’’ என்றார்.

மக்களவை அலுவலில் பங்கேற்காத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங் மக்களவையில் தாக்கல் செய்த அறிக்கைக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதில், ``பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கையின் மூலம் சீனா அத்துமீறல் விவகாரத்தில் இந்திய நாட்டை பிரதமர் நரேந்திர மோடி தவறாக வழிநடத்தியிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. மோடி ஜி., நீங்கள் எப்போது சீனாவுக்கு எதிராக நிற்கப்போகிறீர்கள்..? சீனாவின் பெயரைக் குறிப்பிட அஞ்சாதீர்கள்" என்று கருத்து பதிவிட்டிருந்தார்.

ராஜ்நாத் சிங்

இதையடுத்து, ராஜ்நாத் சிங்கின் நாடாளுமன்ற அறிக்கைக்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், ``தற்போதைய எல்லை நிலவரங்களுக்குப் பொறுப்பு சீனாவிடத்தில் இல்லை. இப்போதைக்கு மிகவும் அவசரமான காரியம் என்னவெனில் இந்தியா தன் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்பதே. தன் தவற்றை இந்தியா திருத்திக்கொள்ள வேண்டும். தரைப்படைகளை விலக்கிக்கொள்வதன் மூலம் பதற்றத்தைத் தணிக்க முடியும்.

இந்தியப் படைகள்தான் உடன்படிக்கைகளை மீறுகின்றன. முதலில் ஊடுருவி, சீனப் படைகள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது இந்தியப்படைகளே.

இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களுக்கிடையே ஏற்பட்ட ஐந்து அம்சத் திட்டத்தை இந்தியா கடைப்பிடிப்பதோடு முந்தைய உடன்படிக்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்தியா - சீனா

இந்நிலையில், இன்று மீண்டும் மக்களவையில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``சர்வதேச எல்லையில் அத்துமீறல் முயற்சிகளைக் கைவிடாவிட்டால் எத்தனை வலிமையான, பெரிய நடவடிக்கைகளையும் எடுக்க இந்தியா தயங்காது’’ என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்திய-சீன எல்லைப் பிரச்னை சிக்கலானது என்றும், பொறுமையாகத் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதையும் இரு நாடுகளும் நம்புவதாகத் தெரிவித்தார்.

இந்தியாவும் சீனாவும் பல ஆண்டுகளாக செய்துவந்த பல்வேறு ஒப்பந்தங்களையும், பொதுவான புரிதல்களையும் பட்டியலிட்டுப் பேசிய ராஜ்நாத் சிங், ``2003-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஒப்பந்தங்களை சீனா மதிக்கவில்லை" என்றார்.

இந்தியா - சீனா எல்லை

இந்தியா-சீனா எல்லைப் பதற்றம் தொடர்பாக எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா தயாராக இருப்பதாகத் தெரிவித்த ராஜ்நாத் சிங், உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்.ஓ.சி) பாரம்பர்ய வழக்கமான சீரமைப்பை சீனா அங்கீகரிக்கவில்லை என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னை தீர்க்கப்படாமல் இருக்கிறது என்றும் கூறினார்.

``இந்திய-சீன எல்லைப் பிரச்னைக்கு தீர்வுகாண முயன்றுவருகிறோம், அதேவேளையில், எந்தச் சவாலையும் எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருக்கிறோம். நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதற்கான எங்கள் உறுதியைப் பற்றி யாருக்கும் சந்தேகம் இருக்கக் கூடாது’’ என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Also Read: அருணாச்சல பிரதேசம்: 5 இந்தியர்கள் மாயமான விவகாரம்... இந்திய ராணுவத்தினரிடம் ஒப்படைத்த சீனா!



source https://www.vikatan.com/government-and-politics/international/rajnath-singh-speaks-about-border-issues-with-china-in-parliament

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக