சென்னை சூளைமேடு, பெரியார் பாதை பகுதியைச் சேரந்தவர் ஆண்டனி (33). இவர் பிளம்பராக வேலை பார்த்துவந்தார். கோடம்பாக்கம் டிரஸ்ட் புரம் பகுதியிலுள்ள மாநகராட்சி மைதானத்தில் நேற்று இரவு ஆண்டனி நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியிருக்கிறார். அப்போது குடிபோதையில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்ட்டிருக்கிறது. அப்போது ஆண்டனியை அவரின் நண்பர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார்கள்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய ஆண்டனி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கோடம்பாக்கம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், ஆண்டனியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆண்டனி கொலை குறித்து அவரின் அப்பா உதயகனி, காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.
Also Read: சென்னை:`லால் கூப்பிடுகிறான்; ஏதோ வேலை இருக்கிறது!' - கஞ்சா மோதலில் நடந்த கொலை
அதன்பேரில் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஆண்டனியின் நண்பர்கள் ஐயப்பன் உட்பட சிலர் இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்திருகிறது. அவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். கொலை நடந்த இடத்தில் காலி மதுபாட்டில்கள் கிடந்தன. ஆண்டனியின் வயிறு, கழுத்து பகுதிகளில் கத்திக்குத்துக் காயங்கள் இருக்கின்றன.
சென்னை தி.நகரில் கடந்த 13-ம் தேதி கடலை வியாபாரி ராமமூர்த்தி என்ற நாராயணமூர்த்தியும் நண்பர்களுடன் பொது இடத்தில்வைத்து மது அருந்தியபோது கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராமமூர்த்தியின் 30 ஆண்டுக்கால நண்பர் கறுப்பு நாகு என்கிற நாகராஜ், காமேஷ், சரவணன், பாலசுப்பிரமணியன், ஹரி ஆகிய ஐந்து பேரை போலீஸார் கைதுசெய்தனர். அடுத்து ரவி மற்றும் மூன்று சிறுவர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர். சென்னையில் நண்பர்களுக்குள் மதுபோதையில் நடக்கும் தகராறில் இரண்டு கொலைகள் நடந்திருக்கின்றன. அதுவும் 13-ம் தேதி, 16-ம் தேதி என அடுத்தடுத்து நடந்திருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
பிளம்பர் ஆண்டனி கொலை குறித்து கோடம்பாக்கம் பகுதி மக்கள் கூறுகையில், `தினமும் இரவு இந்தப் பார்க்கில் ஏராளமானவர்கள் மது அருந்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். தற்போது குடியிருப்புப் பகுதியின் அருகிலேயே இந்தக் கொலை நடந்திருப்பது எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. எனவே, போலீஸார் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும்' என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/kodambakkam-police-books-friends-for-killing-a-man
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக