Ad

புதன், 21 ஜூலை, 2021

`என்கவுன்டர் லிஸ்டில் 42 ரெளடிகள்; அரசியல் தொடர்பு'-திருச்சி தேஜஸ் சுவாமி கைது பின்னணி!

திருச்சியில் உள்ள முக்கிய ரெளடிகளுடன் தொடர்பில் இருந்த தேஜஸ் சுவாமிகளை போலீஸார் அதிரடியாக கைது செய்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருடன் திரைதுறை முதல் கரைவேட்டிகாரார்களும் பலரும் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சி தகவல்.

பாலசுப்பிரமணியன் என்கிற தேஜஸ் சுவாமிகள்

திருச்சி மாவட்டம், அல்லித்துறை அடுத்த கன்னியம்மன் கோவில் அருகில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன் என்கிற தேஜஸ் சுவாமிகள். அவர், தன்னைத்தானே சாமியார் என சொல்லிக்கொண்டு வருகிறார். இந்த நிலையில், பாலசுப்பிரமணியனும் திருச்சியிலுள்ள ஒரு வழக்கறிஞரும் பேசிக்கொள்ளும் ஆடியோ கடந்த வாரம் முதல் வைரலாகி வருகிறது. அதில், "தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல, உயர் அதிகாரிகளும் என்னை நாள்தோறும் சந்தித்துவிட்டுச் செல்கிறார்கள்" என்றும், "தமிழகத்தில் 42 ரெளடிகள் கொண்ட லிஸ்டை போலீஸார் கையில் எடுத்திருக்கிறார்கள். அதில்,டெல்டா மாவட்டங்களில் மட்டும் 12 ரெளடிகள் என்கவுன்டர் லிஸ்டில் இருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் என்கவுண்டர் நடக்கலாம். திருச்சியைச் சேர்ந்த முக்கிய ரெளடிகள் சிலர், என்னை வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள்.

கார்த்தி

சைரன் வைத்த காரில் சென்று அமைச்சர் சேகர்பாபுவை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன்" எனவும் பேசுகிறார். இவருக்கும் ரெளடிக்கும் என்ன தொடர்பு? இவர் சாமியாரா இல்லை ரவுடி சாமியாரா என்று கேலி செய்கிறார்கள் நெட்டிசன்கள். இந்நிலையில் இந்த ஆடியோ குறித்து திருச்சி போலீஸார் சாமியாரை அழைத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் சாமியாரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Also Read: தங்கக் கடத்தல் விவகாரம்; விசாரணையில் கஸ்டம்ஸ் அதிகாரி! - திருச்சி ஏர்போர்ட்டில் நடப்பது என்ன?

இது தொடர்பாக போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம். ”இந்த சாமியாரோடு தி.மு.க, அ.தி.மு.க-வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் தொடர்பில் இருப்பதாக அவரே அந்த ஆடியோவில் சொல்கிறார். ஆடியோவில் பேசிய கார்த்தியையும் கைது செய்துள்ளோம். அத்தோடு திருச்சியில் உள்ள சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் சிலரும் தேஜஸ் சுவாமிகள் நடத்தும் யாகத்தில் கலந்துக் கொண்டிருக்கிறார்கள். திரைதுறையில் கோலோச்சும் திருச்சி நடிகர் ஒருவர் சாமியாரோடு இருந்த புகைப்படைத்தை சமூகவலைதளங்களில் பதிவு செய்திருக்கிறார்.

திருச்சி தேஜஸ் சுவாமி

சுவாமிகள் கைது ஆனதும் உடனே அந்த புகைப்படங்களை நீக்கியிருக்கிறார். இதுபோல் பலரும் தேஜஸ் சாமியாரோடு தொடர்பில் இருக்கிறார்கள். ரெளடிகளுடன் தொடர்பு எப்படி வந்தது.? ரவுடிகளை பயன்படுத்தி எதாவது முறைகேடு, பிரச்னைகள் நடந்துள்ளதா என்று விசாரிக்க தொடங்கியிருக்கிறோம். அத்தோடு ஆறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ளோம். தற்போது தான் விசாரிக்கத் தொடங்கியிருக்கிறோம் பிறகு பேசுகிறோம்" என்று முடித்துக்கொண்டனர்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/trichy-tejas-swamy-in-police-custody-after-audio-went-viral

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக