Ad

வியாழன், 18 மார்ச், 2021

புதுச்சேரி: வேகமெடுக்கும் கொரோனா... பள்ளிகளை மூடும்படி ஆளுநருக்கு சுகாதாரத்துறை பரிந்துரை!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கடந்த சில தினங்களாக கோரோனா தொற்று வேகமெடுத்திருக்கிறது. கடந்த வாரத்தில் 20-25 என்றிருந்த தொற்றின் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று ஒரேநாளில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மற்றும் மாஹே உள்ளிட்ட பிரந்தியங்களில் தொற்றின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்திருக்கிறது. 160 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 157 பேர் வீடுகளில் தனிப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

தொற்றின் தீவிரத்தால் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என இதுவரை சுமார் 32,000 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதாக் கூறுகிறது சுகாதாரத்துறை. இந்தச் சூழலில் கொரோனா தடுப்பூசி தொடர்பான உயர்நிலைக் கூட்டம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தலைமையில் நேற்று மாலை நடைப்பெற்றது.

அந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை இயக்குநரான டாக்டர் மோகன் குமார், தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த அனைத்துப் பள்ளிகளையும் தற்காலிகமாக மூட வேண்டும் என்று ஆளுநர் தமிழிசையிடம் பரிந்துரை செய்தார். கூட்டத்தின் முடிவில், கொரோனா பரிசோதனையையும், தடுப்பூசி போடுவதையும் அதிகரிக்கவும், தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது சுகாதாரத்துறை.

புதுச்சேரி

புதுச்சேரி அரசின் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் உதயசங்கரிடம் பேசியபோது, “முகக்கவசம் அணியாமல் மக்கள் காட்டும் அலட்சியம் காரணமாகவே தற்போது மீண்டும் புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்திருக்கிறது.

காவல்துறையினருக்காக முகக்கவசம் அணியாமல், தங்களின் பாதுகாப்புக்காகவும், தங்களின் குடும்பத்தினரின் பாதுகாப்புக்காகவும் முகக்கவசம் அணிய வேண்டும். அதேபோல தவறாமல் அடிக்கடி கைகளை சோப்புப் போட்டு கை கழுவ வேண்டும். அது முடியாத நேரங்களில் மாற்றாக சானிட்டைசர்களை பயன்படுத்தலாம்.

புதுச்சேரி அரசு இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி இயக்குநர் டாக்டர் உதயசங்கர்

முகக்கவசம் அணிந்தாலே தொற்றை கட்டுக்குள் கொண்டுவரலாம். தகுதியுடையவர்கள் தாமாக முன்வந்து தயங்காமல் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும். அதேபோல கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இவற்றை கடைபிடிக்காவிட்டால் தொற்று மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அடுத்தடுத்த தினங்களில் அதிகரிக்கும். நாம் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய தருணமிது” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/puducherry-health-department-asks-governor-to-close-the-schools-because-of-corona

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக