Ad

வெள்ளி, 19 மார்ச், 2021

சென்னை: பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் பாலியல் புகார் - சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட்!

தமிழகத்தில் பணியாற்றும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் சிறப்பு டிஜிபி ஒருவர் மீது பாலியல் புகாரளித்தார். அந்தப் புகாரை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க டிஜிபி உத்தரவிட்டார். பெண் ஐபிஎஸ் அதிகாரி, தான் பணியாற்றும் இடத்திலிருந்து புகாரளிக்க சென்னை நோக்கி வரும்போது, தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி ஆகியோர் மீதும் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையில் இந்தப் புகாரை விசாரிக்க விசாகா கமிட்டியும் அமைக்கப்பட்டது.

டிஜிபி அலுவலகம்

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஆதரவாக எதிர்கட்சிகள் குரல் கொடுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக இந்த வழக்கை எடுத்து விசாரித்தது. இந்த வழக்கை நீதிமன்றம் தீவிரமாக கண்காணிக்கும் என்றும் தெரிவித்திருந்தது. அதனால் விசாரணை வேகம் பிடித்தது. சிறப்பு டிஜிபி காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். செங்கல்பட்டு எஸ்.பி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சிறப்பு டிஜிபி-யை மட்டும் ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை என்று கேள்வி எழுந்தது. அதனால் சிறப்பு டிஜிபி-க்கு சம்மன் அனுப்பிய சிபிசிஐடி போலீஸார் அவரிடம் மணிக்கணக்கில் விசாரித்தனர்.

அந்த விசாரணை அறிக்கையும் சீலிடப்பட்டு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இந்தச் சூழலில்தான் சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் எப்ஃ.ஐ.ஆரில் இடம்பிடித்திருக்கும் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு எஸ்.பி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். பாலியல் குற்றசாட்டில் டிஜிபி ரேங்கில் இருக்கும் ஒரு உயரதிகாரி சஸ்பெண்ட் செய்யப்படுவது தமிழக காவல் துறையில் முதல் முறையாகும்.

சஸ்பெண்ட்

இந்த வழக்கின் அடுத்த விசாரணை, மார்ச் 23-ம் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன் சிறப்பு டிஜிபி, சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். பெண் ஐபிஎஸ் அதிகாரியின் புகாரில் குற்றம்சாட்டப்பட்ட சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு எஸ்.பி ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு எஸ்.பி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து சிபிசிஐடி போலீஸ் உயரதிகாரியிடம் நாம் பேசினோம், ``இந்த வழக்கை நீதிமன்றம் நேரடியாக கண்காணிப்பதால் மிகவும் கவனத்துடன் விசாரணை நடந்துவருகிறது. எங்களின் முதற்கட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறோம். அதோடு பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த தகவலின் பேரிலும் ஆதாரங்கள் அடிப்படையிலும் விசாரணை நடந்துவருகிறது. மார்ச் 23-ம் தேதி நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள வழக்கு விசாரணையின்போது கூடுதல் தகவல்கள் சமர்பிக்கப்படும்” என்றார்.



source https://www.vikatan.com/news/crime/special-dgp-suspended-over-sexual-harassment-complaint

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக