Ad

வெள்ளி, 13 நவம்பர், 2020

கடற்கரை வீடு, தனிக்குடித்தனம்... எல்லாம் ஓகே... இனியேனும் சித்தார்த் மாறுவானா? #VallamaiTharayo

குடும்பத்தினர் ஊருக்குக் கிளம்புகிறார்கள். சித்தார்த்தின் அக்கா தம்பியைவிட்டுப் பிரிய மனம் இல்லாமல் அழுது தீர்க்கிறார். ``அமெரிக்காவில் விட்டுட்டு இருந்தீங்களே, இப்ப என்ன? அவர் பொண்டாட்டி கூடவும் புள்ளைங்க கூடவும்தானே இருக்கப் போறார்?” என்கிற சரியான கேள்வியைக் கேட்கும் சேது மீது சித்தார்த்துக்கு எரிச்சல் வருகிறது. உடனே அக்கா குடும்பத்தை பத்து நாள்கள் தங்கச் சொல்கிறான். அவர்கள் வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு, அபிக்கு வண்டி வண்டியாக அட்வைஸ் மழை பொழிந்துவிட்டுக் கிளம்புகிறார்கள்.

Vallamai Tharayo

``இப்பவும் சொல்றேன். படிச்சிட்டு சும்மா இருக்காதே. வேலைக்குப் போ. உன்னோட திறமையை வளர்த்துக்க” என்று சேது சொல்வதைக் கேட்டு, யோசித்தபடியே தலையாட்டுகிறாள் அபி.

தனிக்குடித்தனம்... கடற்கரையை ஒட்டிய அழகான வீடு. பல வருடங்களுக்குப் பிறகு, கிடைத்த இந்த வாய்ப்பு தனக்கு நிறைவைத் தரும் என்று எதிர்பார்த்திருப்பாள் அபி. ஆனால், சித்தார்த் எந்த நேரம் இனிமையாக இருப்பான், எந்த நேரம் கடித்து துப்புவான் என்று தெரியாத சூழல். ஒரு மோசமான அதிகாரியின் கீழ் வேலை பார்க்கும் அப்பாவியைப் போல, சித்தார்த்திடம் மாட்டிக்கொண்டு அல்லல்படுகிறாள் அபி. அலுவலக அதிகாரியை 8 மணி நேரம் எதிர்கொண்டால் போதும். ஆனால், சித்தார்த்தை 24 மணி நேரமும் சமாளிக்க வேண்டுமே!

Vallamai Tharayo

`இப்படி இருக்காதே', `அப்படி இருக்காதே' என்று ஒரு குழந்தைக்குச் சொல்வதைப் போல சொல்லிக்கொண்டே செல்கிறான் சித்தார்த். குழந்தைகளின் பள்ளிக்கூடம் பற்றி விசாரிக்கும் அபியிடம், `என் பொறுப்புகளை நீ நினைவுபடுத்த வேண்டாம். எனக்கே தெரியும்' என்று எரிந்து விழுகிறான். கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் பெண்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்வதில் தவறில்லை. அதைச் சொல்லும் விதம் ஒன்று இருக்கிறது அல்லவா!

`எதிர் வீட்டில் ஒரு ஜோடி பால்கனியிலிருந்து குடிக்கிறார்கள்' என்று சொல்லும் அபியிடம், ``அவங்க என்ன செய்தால் நமக்கு என்ன? அது அவர்கள் உரிமை. அதே நேரம் அந்த உரிமை உனக்கு இருக்குன்னு நினைச்சுக்காதே. எனக்கு ஊரில் இருக்கிற மாதிரிதான் இருக்கணும். புரியுதா?” என்று எச்சரிக்கையுடன் சொல்கிறான் சித்தார்த். அடுத்தவர் விஷயத்தில் இது சரி, இது தவறு என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லைதான். அதில் சிறிதளவு நாகரிகத்தையாவது மனைவியிடம் காட்டக்கூடாதா சித்தார்த்?

Vallamai Tharayo

அபியைத் தன்னுடன் உட்கார்ந்து சாப்பிடச் சொல்லும் சித்தார்த், `இங்கே யாரும் இல்லை. நீயும் நானும் மட்டும்தான்' என்று சொல்லும்போது அபிக்கு மட்டுமில்லை நமக்கும் ஓர் எதிர்பார்ப்பு வருகிறது. ஆனால், அடுத்த நொடியே, `யாரும் இல்லாததால் நம்ம பொறுப்பு கூடியிருக்கிறது. எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்ய வேண்டும்' எனும்போது காற்றுப் போன பலூனாக ஆகிவிடுகிறது!

இன்னும் என்ன செய்யப் போகிறான் சித்தார்த்?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா


source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-daily-digital-series-readers-review-for-episode-12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக