Ad

வெள்ளி, 13 நவம்பர், 2020

திரும்ப அமெரிக்காவுக்கே போன சித்தார்த், சிக்கலில் அபி... அடுத்து என்ன? #VallamaiTharayo

விருப்பம் இல்லாமல் ஹனிமூன் சென்ற இடத்தில், எதிர்பாராமல் சந்தித்த நட்பு, நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட்டது. `ஏதுடா சாக்கு கிடைக்கும்... வீட்டுக்கு ஓடிடலாம்' என்று காத்திருந்த சித்தார்த்துக்கு, இது நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. பொதுவாக இந்தியர்கள் இங்கே எப்படி இருந்தாலும் அமெரிக்க வாழ்க்கையில் சில நாகரிகங்களைக் கற்றுக்கொள்வார்கள். ஆனால், சித்தார்த் அப்படி ஓர் அடிப்படை நாகரிகம்கூட இல்லாமல், அபியின் தோழியிடமும் அவள் கணவனிடமும் மனம் புண்படும்படி இப்படிப் பேசுகிறானோ? அது அபியைப் போலவே நமக்கும் அதிர்ச்சியையும் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.

Vallamai Tharayo

``உன் ஃபிரெண்ட் மாதிரி வசதியானவனைக் கல்யாணம் பண்ணிட்டு, அவன் நீங்க சொல்லறதுக்கெல்லாம் தலையாட்டிட்டு, ஜாலியா சுத்தணும்னுதான் உன்னை மாதிரி பெண்கள் எல்லாம் நினைக்கிறீங்களா?” என்று மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு கத்தியும் சித்தார்த் மனம் சமாதானம் ஆகவில்லை. அக்காவிடமிருந்து அழைப்பு வந்தவுடன், `இங்கே எதுவும் சரியில்லை' என்று சொல்லிவிட்டு, உடனே வீட்டுக்குக் கிளம்பிவிடுகிறான். அபிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. மங்குனியாக இருப்பவன்கூட இப்படிச் செய்ய மாட்டான்.

மூன்று மாதங்கள் முடிந்து, அமெரிக்காவுக்கு மூட்டை கட்டும்போது, அபி கர்ப்பமாக இருப்பது தெரியவருகிறது. இந்த நேரத்தில் அபியை அமெரிக்கா அனுப்புவது சரியல்ல என்கிற முடிவுக்கு இரு குடும்பங்களும் வருகின்றன. அக்கா சொல்லிவிட்டால், எப்படி அதை மீறுவான் சித்தார்த்?

``அமெரிக்கால காலையில் வேலைக்குப் போனா ராத்திரிதான் திரும்ப முடியும், நீ தனியா கஷ்டப்படுவே. இங்கேன்னா ரெண்டு குடும்பங்களும் உன்னை நல்லா பார்த்துப்பாங்க. புரிஞ்சுக்க” என்று சொல்லிவிட்டுத் தனியாகக் கிளம்புகிறான் சித்தார்த்.

Vallamai Tharayo

கல்யாணமாவது தன் வாழ்க்கையில் சுவாரஸ்யமான மாற்றத்தைக் கொடுக்காதா என்று எதிர்பார்த்துக் காத்திருந்த அபிக்கு ஏமாற்றமே தொடர்கிறது. முன்பாவது ஒரு குடும்பத்தைத்தான் சமாளிக்க வேண்டியிருந்தது. இப்போது இரு குடும்பங்களையும் சமாளிக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.

மூன்றாவது மாதம் வீட்டு வாசலில் சித்தார்த்துக்கு பை சொல்லும் அபி, அடுத்த காட்சியில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவிலிருந்து ஊர் திரும்பும் சித்தார்த்தை வரவேற்க வாசலில் நிற்கிறாள்.

Vallamai Tharayo

இப்போது இரண்டு குழந்தைகள் அவளுடன் இருக்கின்றனர். இந்த ஆறு ஆண்டுகளில் அபியைச் சித்தார்த் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லவில்லையா என்கிற அதிர்ச்சி நம்மை உறைய வைக்கிறது.

விடை இன்று இரவு 7 மணிக்குத் தெரியலாம்!

- எஸ்.சங்கீதா


source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-readers-review-for-episode-10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக