Ad

புதன், 18 நவம்பர், 2020

ஒருபுறம் பயிற்சி; மறுபுறம் தாக்குதல்! - இலங்கைக் கடற்படையால் காயமடையும் மீனவர்கள்

`நட்பு நாடு’ எனச் சொல்லிக்கொண்டு இந்தியாவின் உதவியுடன் பயிற்சி பெற்றுவரும் இலங்கை ராணுவத்தினரும் கடற்படையினரும் மறுபுறம், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திவரும் சம்பவங்கள் தொடர்கின்றன. இன்று அதிகாலை தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் கல்வீசித் தாக்கியதில் இரு மீனவர்கள் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

குறுகிய கடல் பரப்பை எல்லையாகக்கொண்ட பாக் நீரிணைப் பகுதியில் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்களின் உயிர் பறிபோவது தடுக்கப்பட்டிருந்தாலும், மீனவர்கள் மீதான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. `இந்தியாவின் நட்பு நாடு’ எனச் சொல்லிக்கொள்ளும் இலங்கைக்கு உதவும் வகையில், இலங்கை ராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் இந்தியா, ராணுவப் பயிற்சிகளை அளித்துவருகிறது.

கடந்த மாதம் இலங்கை சென்ற இந்திய கடற்படையினர், இலங்கைக் கடற்படையினருக்கான பல்வேறு பயிற்சிகளை அளித்தனர். மேலும், கடந்த வாரம் இலங்கை ராணுவ வீரர்கள் 18 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்து, பின்னர் அங்கிருந்து வேறு விமானம் மூலம் கொச்சிக்குச் சென்றனர். இவர்கள் கொச்சியில் இந்திய ராணுவத்திடம் பயிற்சிபெற வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கல்வீச்சால் மீனவர் காலில் ஏற்பட்ட காயம்

இந்தநிலையில், கடல் கொந்தளிப்பு காரணமாக கடந்த வாரத்தில் மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள், கடந்த திங்கள்கிழமை மீன்பிடிக்கச் சென்றனர். பாரம்பர்யப் பகுதிகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எச்சரிக்கும்விதமாக துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, இலங்கைக் கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் துரத்தியடித்தனர். இதனால் பீதியடைந்த மீனவர்கள், கடலில் பாய்ச்சியிருந்த தங்கள் வலைகளை வெட்டி விட்டுவிட்டு வெறும் கையுடன் கரை திரும்பினர்.

இந்தச் சம்பவம் மறையும் முன்னரே நேற்று ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் கற்களையும் பாட்டில்களையும் வீசித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். நேற்று காலை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பாரம்பர்யப் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகுகளை நோக்கிக் கற்களையும் கண்ணாடி பாட்டில்களையும் வீசித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் சேசுராஜ் என்ற மீனவரின் தலையில் ஊமைக் காயம் ஏற்பட்டது. மேலும் ஜான் என்பவருக்குச் சொந்தமான படகில் மீன்பிடிக்கச் சென்ற மலைச்சாமி, கருப்பையா ஆகிய மீனவர்களுக்குக் காலில் ரத்தக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து கரை திரும்பிய அவர்களுக்கு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

காயமடைந்த மீனவர் மலைச்சாமி

இந்தியாவின் நட்பு நாடு எனச் சொல்லிக்கொண்டு ராணுவப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு உதவிகளைப் பெறும் இலங்கை, பாரம்பர்யப் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்துவதும், அவர்களது மீன்பிடிச் சாதனங்களைச் சேதப்படுத்தி வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலில் ஈடுபடுவதும் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/rameswaram-fishermen-injured-in-sl-navy-attack

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக