Ad

புதன், 18 நவம்பர், 2020

கந்த சஷ்டித் திருவிழாவை குமரன் குன்றத்திலிருந்து நாளை நேரலையாகக் காண்போம்!

முருகப் பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு தன்னுடைய அருள் சின்னங்களாக ஆட்கொண்டார். அந்நாளே சூர சம்ஹார விழா எனப்படுகின்றது. இந்த ஆண்டு கொரோனா நோய்த் தடுப்பு காரணங்களுக்காக விமரிசையாக இந்த விழா எங்கும் கொண்டாடப்படவில்லை என்பது தெரிந்திருக்கும். எனவே சக்தி விகடன் வாசகர்களான உங்களுக்காக 'மத்திய சுவாமிமலை' என்று கொண்டாடப்படும் சென்னை குரோம்பேட்டை ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமி கோயில் வைபவங்களை நேரலையாக ஒளிபரப்ப இருக்கிறோம்.

நேரலையில் சஷ்டியன்று தரிசிக்க...

காஞ்சி அருளாளரின் அருள் வாக்கால் எழுந்தருளிய சுவாமிநாதன்!

1958- ஆம் ஆண்டு டிசம்பர் 10- ஆம் நாள். குரோம்பேட்டைக்கு விஜயம் செய்திருந்த காஞ்சி மகாபெரியவர், ஏரிக்கரைக்கு நீராட வந்தார். அப்போது அங்கிருந்த 'பங்களா மலை'யை உற்று நோக்கிப் பரவசமானார். "நீங்கள்லாம் கொடுத்து வச்சவா! இந்த மலை சுப்ரமண்யரின் சாந்நித்தியம் பெற்ற தலமாகப் போறது. இங்கே முருகன் கோயில் கொள்ளப் போறான்!'' தெய்வ முனியான அவர் வாக்கில் நல்லுரை எழுந்தது. அதன்படியே 'ஸ்ரீபாலசுப்ரமண்ய ஸ்வாமி சத்சங்கம்' என்ற அமைப்பு உருவாகி, மலை அடிவாரத்தில் ஸித்தி விநாயகருக்கு சந்நிதி அமைத்தனர். அப்போது மலை மீது தென்பட்ட வேலாயுதத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப் போன அந்த அமைப்பினர் வேலனின் திருவருளால் கோயில் திருப்பணிகளைத் தொடங்கினர். 9.2.1979 அன்று ஆலய கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தேறியது. தெய்வீக வடிவான காஞ்சிமுனிவர் சொன்னபடியே குமரனும் அங்கு சுவாமி நாதனாக எழுந்தருளினார்.

பிறகு கோயில் பிரசித்தமாக 1983-ல் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருக்கரத்தால் லகு சம்ப்ரோக்ஷணம் நடந்தேறியது. 1991-ல் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், நவக்கிரகங்கள் மற்றும் இடும்பன் சந்நிதிகள் அமைக்கப்பெற்று கும்பாபிஷேகம் நடந்தது. ஜகத்குரு சிருங்கேரி சாரதாபீடம் ஸ்ரீசங்கராச்சாரிய ஸ்வாமிகளும் 1995-ம் ஆண்டு இங்கு வந்து அருளாசி வழங்கினார். பிறகு மீண்டும் முருகப்பெருமான் சந்நிதி விரிவுபடுத்தப்பட்டு, கோபுரம் மற்றும் மண்டபக் கட்டுமானங்களுடன், ஸ்ரீஜெயமங்கள தன்மகாளி, சூரியன், சந்திரன், பைரவர், ஸ்ரீசரபேஸ்வரர் மூர்த்தங்கள் பிரதிஷ்டை ஆகி, 1998-ல் கும்பாபிஷேகம் கண்டது.

ராகு - கேது தோஷம் நீக்கும் ஸித்தி விநாயகர்!

மலை அடிவார மண்டபத்தில் ஸ்ரீஸித்தி விநாயகர் எழுந்தருளி உள்ளார். கேது தோஷம் உள்ளோர் இந்த விநாயகருக்கு சிவப்பு மலர்கள், அருகம்புல் சாத்தி வழிபடுகிறார்கள். இங்குள்ள ஸ்ரீஜெய மங்கள தன்மகாளி சந்நிதியில் பௌர்ணமி தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மலையேற 108 படிகள்! சித்திரை முதல் நாளன்று குமரன் குன்றம் திருப்புகழ் மன்றத்தினரால் படி உற்ஸவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. படிகள் ஏறிச் சென்றால் முதலில் வருவது ஸ்ரீமீனாட்சி- சுந்தரேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்துக்கு லிங்க பிரதிஷ்டையின்போது, ஆவுடையாருக்குப் பொருத்தமான லிங்கம் கிடைக்காத நிலையில் நர்மதையில் கிடைத்த லிங்க பாணத்தை, காஞ்சி மகாப் பெரியவரின் ஆலோசனைப்படி இங்கே பிரதிஷ்டை செய்தனராம். சுந்தரேஸ்வரரின் சந்நிதி கோஷ்டத்தில் ஸ்ரீநர்த்தன கணபதி, ரிஷபாரூடர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீவிஷ்ணு துர்கை, ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோரையும் அம்பிகையின் சந்நிதியைச் சுற்றி மாஹேஸ்வரி, வைஷ்ணவி, பிராம்ஹி ஆகியோரையும் தரிசிக்கலாம்.

கால் மாறியாடும் கனகசபேசர்!

தெற்கு நோக்கி அருளும் ஸ்ரீநடராஜர், மதுரையம்பதியைப் போன்றே இங்கும் வலது காலைத் தூக்கி ஆடும் கோலத்தில் உள்ளார். அருகே சிவகாமி அம்மையும் மணிவாசகரும் அருள்வேண்டி நிற்கிறார்கள். இந்த ஆலயத்தில் ஸ்ரீசரபர் தனிச் சந்நிதியில் அருள் பாலிப்பது சிறப்பு. மேலும் சிவசூரியன், சோமன், ஸ்ரீபைரவர் ஆகியோரையும் இங்கு தரிசிக்கலாம்.

ஊரு ஹஸ்தக் கோலத்தில் சுவாமிநாதன்!

சுந்தரேஸ்வரர் ஆலயம் தாண்டி படிகள் ஏறிச் சென்றால் சுவாமிநாதனை தரிசிக்கலாம். ஆலயக் கருவறையில் வலக் கரத்தில் தண்டம்; இடக்கரத்தை இடது தொடையில் வைத்து (ஊரு ஹஸ்தம்) அருள் பாலிக்கிறார் குமரன். ஊர்த்வ சிகை மேல் நோக்கியும், பூணூலும் கௌபீனமும் தரித்து கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமி. எதிரில் அதிசயமாக யானை வாகனம். மூலவரைப் போன்றே உற்ஸவ மூர்த்தியும் சொல்லால் சொல்ல முடியாதப் பேரழகு. மூலவரின் கோஷ்ட மூர்த்திகளாக ஸ்ரீகுமார கணபதி, சுமித்ர சண்டேஸ்வரர், ஸ்ரீதுர்கை ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். கும்பிட்டவர் குலம் விளங்கச் செய்யும் கந்தப்பெருமானின் கருணையை எண்ணி வழிபட்டால் குறைகள் யாவும் தீரும் என்கிறார்கள். முருகன் சந்நிதிக்குக் கீழே தியான மண்டபமும் மலையின் மேல் சுனையும் இருக்கிறது. இதை 'குமார தீர்த்தம்' என்கிறார்கள். இயற்கை எழில் கொஞ்ச சென்னையில் இருக்கும் இந்த மத்திய ஸ்வாமிமலையை ஒருமுறையேனும் எல்லோரும் தரிசிக்க வேண்டும். இங்கு கொஞ்சி விளையாடும் ஸ்ரீசுவாமி நாதனை தரிசிக்க வேண்டும்! கந்த சஷ்டி இறுதி நாளான நாளைக்கு (20-11-2020) காலை 10 மணி முதல் நடைபெறும் வைபவங்களை நேரலையாகக் கண்டு தரிசிக்கலாம்.



source https://www.vikatan.com/spiritual/temples/sakthi-vikatan-live-telecast-of-kanda-sashti-event-2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக