Ad

செவ்வாய், 17 நவம்பர், 2020

தீபாவளியன்று மந்தம், ஞாயிற்றுக்கிழமை அமோகம்... பண்டிகைக் கால இறைச்சி விற்பனை எப்படி?

தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது பட்டாசும் புதுத்துணியும்தான். அதற்கு அடுத்தபடியாக ஆட்டுக்கறியைக் குறிப்பிடலாம். கொரோனா ஊரடங்கு மக்களின் பொருளாதார நிலையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆடு இறைச்சி விற்பனை

அதன் விளைவாக ஜவுளி மற்றும் பட்டாசு வியாபாரம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மிகவும் மந்தமாகவே இருந்ததாக வியாபாரிகள் கூறுகின்றனர். குறிப்பாக, பட்டாசு மீதான கட்டுப்பாடுகள் ஒருபுறம் இருந்தாலும், மக்களின் வாங்கும் திறன் குறைந்த காரணத்தால், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 50% மட்டுமே பட்டாசு விற்பனை ஆனதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆட்டுக்கறி விற்பனையும் தீபாவளி தினத்தன்று மிகவும் மந்தமாக இருந்தது. இதற்கும் மக்களின் வாங்கும் திறன் காரணம் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், தீபாவளிக்கு மறுநாள் வழக்கத்துக்கு மாறாக, ஆட்டுக்கறி விற்பனை படு ஜோராக நடந்துள்ளது.

Also Read: `மீண்டும் இறைச்சி சந்தையில் கொரோனா; மூடப்பட்ட மார்க்கெட்’ - சீனாவில் அதிகரிக்கும் வைரஸ் பரவல்

நம்மிடையே பேசிய தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டுக்கறி விற்பனையாளர் ராஜேந்திரன், "தீபாவளி தினத்தன்று அமாவாசை நாள். அதனால், ஆட்டுக்கறி விற்பனை நாங்கள் நினைத்த அளவுக்கு இல்லை என்றாலும்கூட, ஓரளவுக்கு விற்பனை இருந்தது. ஆனால், அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தைவிட அதிக விற்பனை நடந்தது. வழக்கமாகத் தீபாவளி அன்று 10 ஆடுகள் அறுப்போம். அன்று நான்கு ஆடுதான் விற்பனையானது.

இறைச்சி வியாபாரம். / Representational Image

அதேபோல வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு ஆடுகள்தான் அறுப்போம். ஆனால், தீபாவளி அன்று அறுக்க முடியாத ஆறு ஆடுகள் ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது. அமாவாசை தினம் முன்னோர்களை மனதில் நினைத்து வழிபடக்கூடிய தினம். அதனால், மக்கள் யாரும் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டவில்லை. ஆனால், ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கே ஆச்சர்யம் தந்துவிட்டது. எல்லா இடங்களிலும் விசாரித்தேன் நல்ல வியாபாரம் என்று கூறினார்கள்" என்றார்.

ஒருபுறம் பட்டாசு, ஜவுளி விற்பனை மந்தம் என்றாலும்கூட, குடும்பத்தோடு இறைச்சி சமைத்து சாப்பிடுவதில் மக்கள் குறை வைக்கவில்லை. அதுவும் நாள் பார்த்து இறைச்சி வாங்கி சாப்பிட்டுள்ளனர் மக்கள் என்பதையே ஆட்டுக்கறி விற்பனை காட்டுகிறது.



source https://www.vikatan.com/food/food/at-theni-meat-sales-went-down-on-diwali-but-soared-on-sunday

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக