Ad

செவ்வாய், 17 நவம்பர், 2020

பழனி துப்பாக்கிச்சூடு: காயமடைந்த ஒருவர் உயிரிழப்பு! தியேட்டர் ஓனர் மீது கொலை வழக்கு

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் உள்ள அப்பர் தெருவில் 12 சென்ட் காலியிடம் உள்ளது. அதனை பழனி அருகே உள்ள அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் (வயது 62) விலைக்கு வாங்கியுள்ளார். காலியிடத்தின் அருகே வசித்துவரும் பிரபல திரையரங்க உரிமையாளர் நடராஜ் (வயது 80), அந்த இடம் தன்னுடையது எனக் கூறியிருக்கிறார். இதனை ஏற்க மறுத்த இளங்கோவனுக்கும், நடராஜுக்கும் பல மாதங்களாக பிரச்னை நீடித்துவந்துள்ளது.

மருத்துவமனையில் சுப்பிரமணியம்

இந்நிலையில், நேற்று காலை, தனது உறவினர்களான பழனிச்சாமி (வயது74), சுப்பிரமணியம் (வயது57) மற்றும் சிலரை அழைத்துக்கொண்டு வந்த இளங்கோவன், அந்த காலியிடத்தில் வேலி அமைக்க முயன்றுள்ளார்.

Also Read: வாக்குவாதம்.. துப்பாக்கி.. வீடியோவில் பதிவான கொலை! - உ.பி அரசியல் பிரமுகர், மகனுக்கு நேர்ந்த கொடூரம்

இதனை அறிந்த நடராஜ், வேலி அமைக்க முயன்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென தான் எடுத்துவந்திருந்த கைத்துப்பாக்கியால், பழனிச்சாமியின் காலிலும், சுப்பிரமணியத்தின் வயிற்றிலும் சுட்டார். அக்கம்பக்கத்தினர், நடராஜை பிடிக்க முயல, அவர் அங்கிருந்து ஓடித் தப்பினார். காயமடைந்த இருவரும், பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நடராஜ்

காயம்பட்ட பழனிச்சாமியின் காலில் இருந்து தோட்டா அகற்றப்பட்டது. ஆனால், சுப்பிரமணியத்தின் வயிற்றில் இருந்த தோட்டாவை அகற்ற முடியாததால், மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

அங்கே சிகிச்சையில் இருந்த சுப்பிரமணியம், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மேலும், காலில் காயமடைந்த பழனிச்சாமியும், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார்.

நடராஜின் கைதுப்பாக்கி மற்றும் தோட்டாக்கள்.

Also Read: `மூட்டுவலி மருந்து; துப்பாக்கி; மயில் வேட்டை!' -கேரள வனத்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த மூவர் கும்பல்

இச்சம்பவத்தை அடுத்து, நடராஜ் மீது கொலைமுயற்சி உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பழனி காவல்துறையினர், அவரை கைது செய்து, நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நிலக்கோட்டை கிளைச்சிறையில் அடைத்தனர்.

தற்போது சுப்பிரமணியம் இறந்த நிலையில், நடராஜ் மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சுப்பிரமணியம்.

Also Read: நீலகிரி: யானையைத் தொடர்ந்து சிறுத்தை..! - கூடலூரில் தலைதூக்கும் துப்பாக்கி கலாசாரம்?

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறும் போது,``நடராஜிடம் இருந்த கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு முதல் கைத்துப்பாக்கிக்கான உரிமம் முடிவடைந்துள்ளது. அதனைப் புதுப்பிக்க அவர் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது” என்றனர்.



source https://www.vikatan.com/social-affairs/crime/palani-shootout-murder-case-filed-against-theatre-owner

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக